கொரோனா வைரஸ் பரவி வரும் சீனாவின் வுகான் நகரில் இருந்து 2வது கட்டமாக 323 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.  வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.  பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது.


கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், யுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் இதுவரை 12 ஆயிரம் பேர்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் சீனா மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதற்கிடையே, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள வுகான் நகரில் உள்ள இந்தியர்களை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதுகுறித்து சீன அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சீன அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியது. 


அதைத்தொடர்ந்து, ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக சிறப்பு விமானம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் சீனாவுக்கு புறப்பட்டது. வுகான் நகரில் இருந்து முதல் கட்டமாக 324 இந்தியர்களை அழைத்துக்கொண்டு வந்த முதல் விமானம் நேற்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது. 


இந்நிலையில், சீனாவின் வுகான் நகரில் தங்கியுள்ள மேலும் 323 இந்தியர்களை அழைத்து வர ஏர் இந்தியாவின் போயிங் 747 இரண்டாவது விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம் 323 இந்தியர்களுடன் இன்று காலை 9 மணியளவில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என்பது குறித்து டெல்லி விமான நிலையத்தில் மருத்துவர்கள் குழுவினர் தீவிர பரிசோதனை செய்ய உள்ளனர். இதற்காக விமானம் தரையிறங்க உள்ள ஓடுபாதையின் ஓரத்திலேயே முகாம் அமைக்கப்பட்டுள்ளது. 


ஞாயிற்றுக்கிழமை சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் மாநில வாரியான பிரிவு இங்கே:


ஆந்திரா: 02
பீகார்: 42
டெல்லி: 16
குஜராத்: 04
ஹரியானா: 16
இமாச்சலப் பிரதேசம்: 01
ஜம்மு & காஷ்மீர்: 29
ஜார்க்கண்ட்: 02
கர்நாடகா: 04
கேரளா: 73
மத்தியப் பிரதேசம்: 06
மகாராஷ்டிரா: 14
ஒடிசா: 01
பஞ்சாப்: 05
ராஜஸ்தான்: 14
தமிழ்நாடு: 28
உத்தரபிரதேசம்: 53
உத்திரகண்ட்: 02
மேற்கு வங்கம்: 09


மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் அவர்கள் சிறப்பு முகாமில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளனர். இந்த  சிறப்பு முகாமில், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.