இறுதிகட்ட விசாரணை ஆரம்பம்.!! அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
இன்று முதல் சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கின் இறுதிகட்ட விசாரணை தொடங்கியுள்ளது. இதனையடுத்து அயோத்தி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் வழக்கின் விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இறுதி தீர்ப்பு வழங்க இன்னும் நான்கு நாட்கள் உள்ளநிலையில், இன்று முதல் சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கின் இறுதிகட்ட விசாரணை தொடங்கியுள்ளது. இதனையடுத்து அயோத்தியில் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி நில உரிமை வழக்கு தொடர்பான 3 தரப்பினரும் தங்கள் வாதங்களை வாதங்களை அக்டோபர் 18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் அக்டோபர் 17 ஆம் தேதியுடன் அயோத்தி வழக்கின் இறுதி விசாரணை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது. தற்போது இறுதிக்கட்ட வாதம் நடைபெற்று வருகிறது. இருபத்தி ஏழு ஆண்டுகளாக சர்ச்சை நிலவி வந்த அயோத்தி நில வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்க இருப்பதால், நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2010 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் "ராமஜென்ம பூமி" என கூறப்படும் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம்சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லாலா ஆகியவை தங்களுக்குள் சரிசமமாக மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்து-முஸ்லீம் மதத்தினரிடையே சுமூகமான உறவை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்புகிறது என்றும், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவதற்கான மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் மத்தியஸ்த முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.