CAB 2019: இது பாகிஸ்தான் நாடாளுமன்றம் அல்ல; மத்திய அரசை சாடிய சிவசேனா
சில கட்சிகள் பாகிஸ்தானைப் போலவே ஒரே மொழியில் பேசுகின்றன என பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிராக வலுவான கண்டனத்தை பதிவு செய்த சிவசேனா
புது டெல்லி: குடியுரிமை மசோதா மீதான விவாதத்தின் போது மாநிலங்களவையில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக சிவசேனா தனது எதிர்ப்பை அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு எதிராக வலுவான கண்டனத்துடன் தொடங்கி சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத், சில கட்சிகள் பாகிஸ்தானைப் போலவே ஒரே மொழியிலும் பேசுகின்றன என இந்திய பிரதமர் மோடி கூறியதற்கு அவர் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கினார்.
இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் துரோகிகள், ஆதரிப்பவர்கள் தேசபக்தர்கள் என்று மத்திய அரசு கூறுகிறது. நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள். மக்கள் எங்கள் அனைவருக்கும் வாக்களித்தனர். இது பாகிஸ்தானின் சட்டசபை அல்ல…. . நீங்கள் பாகிஸ்தானின் மொழியை விரும்பவில்லை என்றால், உங்களிடம் (மத்திய அரசு) வலுவான அரசாங்கம் உள்ளது தானே.. பின்னர் ஏன் பாகிஸ்தானை முடிக்கக்கூடாது (பாகிஸ்தான் கோ கதம் கரோ),” என்று ஆவேசமாக கூறினார். மேலும் "யாரும் எங்களுக்கு தேசபக்தி சான்றிதழ்" வழங்க தேவையில்லை என்றும் மத்திய அரசை நோக்கி சாடினார்.
பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு சிறப்பு உரிமை வழங்கும் குடியுரிமை மசோதாவை மதத்திலிருந்து அல்ல, மனிதகுலத்தின் பார்வையில் இருந்து பார்க்க வேண்டும் என்று மூத்த சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் மாநிலங்களவையில் தெரிவித்தார். மசோதாவின் விதிகளை விமர்சிக்கவில்லை. இந்தியாவில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது உண்மைதான். அதைச் சுற்றி எந்த அரசியலும் இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு பாஜகவை கேட்டார்.
வடகிழக்கில் இந்த மசோதாவை எதிர்க்கும் மக்களும் குடிமக்கள் தான். கட்சியின் இந்துத்துவா சான்றுகளை அடிக்கோடிட்டுக் காட்டினார். நாங்கள் எவ்வளவு கடினமான இந்துக்கள் என்று அறியப்படுகிறது. எங்களுக்கு உங்கள் சான்றிதழ் தேவையில்லை என்று அவர் கூறினார்.
மாநிலங்களவையில் பேச சஞ்சய் ரவுத் மூன்று நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவர் தொடர்ந்து ஆறு நிமிடம் தாண்டி பேசியதால், அவரது மைக்ரோஃபோன் அணைக்கப்பட்டது.
மக்களவையில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக சிவசேனா வாக்களித்திருந்தது. ஆனால் மாநிலங்களவைக்கான தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. அதாவது சிவசேனா சார்பில் இரண்டு கோரிக்கை பரிந்துரை செய்யப்பட்டது. அதில் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இலங்கை தமிழ் அகதிகளைச் சேர்ப்பது ஒன்றாகும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் ஆதரவு அளிப்போம் என சிவசேனா கூறியுள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள்ளார்.
அதாவது இந்த புதிய சட்டத்தில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர் மற்றும் கிறிஸ்தவர்கள் குறைந்தது இந்தியாவில் 6 ஆண்டுகள் வசித்தாலே, எந்தவித ஆவணமும் இல்லையென்றாலும், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே புதிய சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆனால் இதில் மிகப்பெரிய பிரச்சனை என்வென்றால், இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள் மற்றும் ரோஹிஞ்சா முஸ்லீம் போன்றவர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தான் எதிர்கட்சிகள் கேள்விகளை எழுப்புகின்றன.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.