பீகாரில் வாக்கப்பதிவு எந்திரங்கள் ஓட்டல் அறைக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரம் தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தல் 5-ஆம் கட்ட தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இவற்றில் பீகார் மாநிலம் முசாபர்பூர் தொகுதியும் அடங்கும்.


அங்கு வாக்குப்பதிவு நடைப்பெற்றுக் கொண்டிருந்தபோது, அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரிகளில் ஒருவரான கோட்டாட்சியர் அவதேஷ் குமார், முசாபர்பூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு ஒரு வாகனத்தில் வந்தார். அவரது வாகனத்தில், 6 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்டுப்பிடிக்கப் பட்டன.


இந்த எந்திரங்கள் அவரது உத்தரவுப்படி, கீழே இறக்கப்பட்டு ஓட்டலில் உள்ள ஒரு அறைக்குள் அவை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


இதற்கிடையே, ராஷ்டிரீய ஜனதாதளம் தலைமையிலான மகாகூட்டணி பிரமுகர்கள், இந்த காட்சியை தற்செயலாக பார்த்து விட, ஏதோ முறைகேடு செய்ய திட்டம் நடக்கிறது என்று அவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.


இதடையடுத்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர். பா.ஜ.க வேட்பாளர் அஜய் நிஷாத்தை வெற்றி பெற வைப்பதற்காக அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பு பெட்டக அறையிலோ அல்லது வாக்குச்சாவடியிலோ தான் வைக்க வேண்டும். வேறு இடங்களில் வைக்கக்கூடாது என்பது விதிமுறை. எனவே, இந்த விதிமுறையை மீறி, ஓட்டல் அறைக்குள் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்திருந்ததற்காக, தேர்தல் அதிகாரி அவதேஷ் குமாருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் வழங்கியது.


ஓட்டுப்பதிவு எந்திரங்களை கீழே இறக்க உதவிய 5 காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியரான அலோக் ரஞ்சன் கோஷ் தெரிவித்துள்ளார்.


இருப்பினும், அந்த 6 ஓட்டுப்பதிவு எந்திரங்களும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படவோ, அவற்றின் ‘சீல்‘ உடைக்கப்படவோ இல்லை என்று ஆட்சியர் கோஷ் கூறினார்.