என் கன்னத்தில் அறை விழுந்துள்ளது. எனினும் எனது நிலைப்பாட்டில் இருந்து நான் பின்வாங்க போவதில்லை எனவும், மதசார்பற்ற இந்தியாவுக்கான போராட்டத்தை தொடர்வேன் என்றும் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ் சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக எதிர்த்து வந்தார். பணமதிப்பிழப்பையும், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்துத்துவா அமைப்புகளை தொடர்புபடுத்தியும் விமர்சித்தார்.


கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரகாஷ்ராஜை கண்டித்து பாஜக-வினர் போராட்டங்கள் நடத்தினர். இதற்கிடையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசத்தை தொடங்கிய நிலையில் பிரகாஷ்ராஜும் அரசியலில் குதித்தார்.


நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் களம் இறங்கினார். வீதிவீதியாக தீவிர பிரசாரமும் மேற்கொண்டார். எனினும் அவரது முயற்சிகள் அவருக்கு கைகொடுக்கவில்லை. தோல்வி முகத்துடன் திரும்பினார்.



இதுகுறித்து பிரகாஷ்ராஜ் தெரிவிக்கையில் “என் கன்னத்தில் அறை விழுந்துள்ளது. மேலும் கேலி, இழிவான சொற்கள், அவமானங்கள் எனது பாதையில் வருகின்றன. எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பேன். மதசார்பற்ற இந்தியாவுக்கான போராட்டத்தை தொடர்வேன். இப்போதுதான் கடுமையான பயணம் ஆரம்பித்து உள்ளது. பயணத்தில் என்னோடு இருந்தவர்களுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.