சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை மாதந்தோறும் 4 ரூபாய் என்ற அடிப்படையில் உயர்த்திக்கொள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான், அடுத்த ஆண்டு மார்ச் முதல் சிலிண்டர்க்கு வழங்கப்பட்ட அனைத்து மானியங்களும் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியனவும், வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீது மாதந்தோறும் வாட் வரி தவிர்த்து 2 ரூபாய் உயர்த்திக்கொள்ளும்படி மத்திய அரசு தெரிவித்திருந்தது. 


தற்போது, மானியத்தை முற்றிலும் அகற்றும் வகையில், மாதந்தோறும் சிலிண்டருக்கான விலையை 2 ரூபாய்க்கு பதிலாக 4 ரூபாய் உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கபபட்டிருப்பதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்தார். 


ஜூலை 1, 2016 முதல் ‘பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் 2 ரூபாய் என்ற அளவில் விலையை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின் இப்போதுவரை எண்ணெய் நிறுவனங்கள் 10 முறை விலையை உயர்த்தியுள்ளது. தற்போது மீண்டும் இந்த ஆண்டு மே 30-ம்தேதி வெளியிட்ட உத்தரவின் படி, ஜூன் 1-ம்தேதியில் இருந்து மாதந்தோறும் வாட் வரி தவிர்த்து 4 ரூபாய் உயர்த்த எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் அனுமதி பெற்றன. அரசு மானியம் முழுமையாக ரத்து ஆகும் வரை அல்லது மார்ச் 2018 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை மாதந்தோறும் விலையை உயர்த்திக் கொள்ளலாம்’ என்று மத்திய மந்திரி கூறினார்.


மானியவிலை சிலிண்டர்களைப் பொருத்தவரையில் கடந்த ஆண்டு டெல்லியில் ரூ.419.18 என்ற அளவில் இருந்த ஒரு சிலிண்டர் பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது ரூ.477.46 ரூபாயில் உள்ளது. மானியமில்லா சிலிண்டர் ரூ.564 ஆக உள்ளது. சென்னையில் தற்போது மானியவிலை சிலிண்டர் விலை ரூ.465.56 ஆகவும் மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.574.00 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.