இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமான மசூதிகளில், இஸ்லாமிய பெண்களை வழிபட அனுமதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில், ஹிந்து அமைப்பு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளபடி செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவைச் சேர்ந்த, அகில பாரத ஹிந்து மஹாசபா என்ற அமைப்பின் சார்பில் அதன் தலைவர், சுவாமி தத்தாத்ரேயா சாய் ஸ்வரூப் நாத் என்பவர், மாநில உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான மசூதிகளில், இஸ்லாமிய பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என, கோரியிருந்தார். உயர்நீதிமன்றத்தில் அந்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.


இதைத்தொடர்ந்து இந்த அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், தீபக் குப்தா, அனிருத்தா போஸ் அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது வழக்கு தொடர்ந்திருந்த சாமியாரும், நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். அவரிடம் தலைமை நீதிபதி, ''இந்த வழக்கை தொடர, நீங்கள் யார்; எந்த விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளீர்கள்; பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் எங்கள் முன் வர வேண்டும்,'' என தெரிவித்தனர்.


அதற்கு பதிலளிக்கும் வகையில், அந்த சாமியார் மலையாள மொழியில் பேச முற்பட்டார். 'அவர் பேசுவது புரியவில்லை; அவரின் வழக்கறிஞர், மொழி மாற்றம் செய்யுங்கள்' என, நீதிபதிகள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சாமியார் சார்பில், வழக்கறிஞர் ஒருவர் பேசினார். எனினும், அந்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதிகள், 'கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்ற, நாங்கள் விரும்பவில்லை. இந்த மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவு பிரப்பித்தனர்.


கேரள உயர்நீதிமன்றத்தில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட போது, வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே, அதன் விபரங்கள் ஊடகங்களுக்கு சென்று விட்டன. விளம்பரத்திற்காகவே வேண்டுமென்றே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என, நீதிபதிகள், அப்போது கருத்து தெரிவித்திருந்தனர்.