சபரிமலை வழக்கு தொடர்பான எந்த உத்தரவிற்கு இடைக்கால தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 49 மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை வரும் ஜனவரி 22-ஆம் நாள் நடைப்பெறும் என அறிவித்துள்ள உச்சநீதிமன்றம், சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டாலும் முந்தைய உத்தரவுகளுக்கு எந்த இடைக்கால தடையும் இல்லை என தெரிவித்துள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட போது இளம்பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயற்சித்தனர். பின்னர் இந்து அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.



இதற்கிடையில், சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பினை திரும்ப பெற வேண்டும் எனவும், மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது என்றும் தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்ளிட்ட 49 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களின் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரன்சன் கோகய், RF நாரிமன், கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று நடைபெற்றது. இந்த அமர்வில், சபரிமலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 49 மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை வரும் ஜனவரி 22-ஆம் நாள் வழக்கறிஞர்கள் வாதத்துடன் நீதிபதி ரன்சன் கோகாய் தலைமையில் நீதிமன்ற அறையில் நடைப்பெறும் என உத்தரவிட்டுள்ளார். 


வரும் 16-ஆம் நாள் மண்டல மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கபடவுள்ளது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.