இந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்...
தங்கள் நாட்டில் ஆதார் முறையை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது..!
தங்கள் நாட்டில் ஆதார் முறையை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது..!
இந்தியாவில் ஆதார் முறை வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து, இதே முறையை பின்பற்ற மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது. அங்கு அரசின் திட்டங்கள், உதவிகள், மானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆதாரை கொண்டு வருவது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி மலேசியா சென்றிருந்தார். அப்போது, ஆதாரை கொண்டு வருவது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் மகாதிர் முகமதுவும், பிரதமர் மோடியும் ஆலோசனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக மலேசிய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் குல சேகரன் தலைமையிலான குழு இந்தியாவுக்கு கடந்த வாரம் வந்தது.
அந்த குழுவில் மலேசிய தலைமை வங்கி, நிதியத்துறை அமைச்சகம், பொருளாதார விவகார பிரிவு, மனிதவள அமைச்சகம் உள்ளிட்டவற்றின் உயர் அதிகாரிகள் இருந்தனர்.
இது குறித்து மலேசிய மனிதவள அமைச்சர் குல சேகரன் கூறுகையில், “ஆதார் முறையை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளை நாங்கள் சந்தித்து பேசினோம். எங்கள் நாட்டில் ஆதாருக்கு பதிலாக மைகாட் (MyKad) முறையை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதனை நடைமுறைப்படுத்தினால் போலிகள் ஒழிக்கப்பட்டு அரசுக்கு செலவு மிச்சமாகும். இப்போது பெட்ரோல், டீசலுக்காக மக்களுக்கு மானியம் வழங்கி வருகிறோம்.
இதில் போலிகளை ஒழிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த மானியம் செக் அல்லது நேரடி பணமாக வழங்கப்படுகிறது. ஆதார் போன்றதொரு முறையை எங்கள் நாட்டில் கொண்டு வந்தால், பயனாளர்களின் நேரடி வங்கி கணக்குக்கு பணம் செலுத்தப்படும். எரிபொருளை தவிர்த்து, குறைந்த வருமானம் உடையவர்கள், பிள்ளைகள் இல்லாத தாய் உள்ளிட்டோருக்கும் மலேசிய அரசு மானியம் அளித்து வருகிறது என்றார்.
சமீபத்தில், இந்தியாவில் ஆதார் தொடர்பான வழக்கில் வருமான வரி செலுத்துதல், பான் கார்டு உள்ளிட்டவற்றுக்கு ஆதார் கட்டாயம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.