பிக்பாஸ்(இந்தி) நிகழ்ச்சியின் சீசன் 11 போட்டியில் பட்டம் வென்ற ஷில்பா ஷிண்டே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை தேர்தலுக்கு ஆயுத்தமாகி வருகின்றன. குறிப்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் நடிகர்கள் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளன. 


இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில், பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷிண்டே  காங்கிரஸ் கட்சியின் மும்பை நகர தலைவர் சஞ்சய் நிருபம் முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.


காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம்  நடிகை ஷில்பா ஷிண்டே கூறியதாவது... 'பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நாட்டை ஆட்சி செய்துள்ளது. இதனால் இந்த கட்சியில் சேர முடிவு செய்தேன். 


தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் நமக்கு மாற்றம் தேவை, அந்த மாற்றத்தை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே கொண்டு வர முடியும் என நான் நம்புகிறேன். நாட்டின் அடுத்த பிரதமராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும் என்பதே எனது ஆசை" என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் கட்சியில் ஜாதி, மதம் பார்ப்பதில்லை எனவும் குறிப்பிட்டு பேசினார். 


எனினும் ஷில்பா ஷிண்டே-வின் கட்சி இணைப்பிற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.