தெலுங்கானா: வாகன பதிவிற்கு இனி ஆதார் கட்டாயம்
வாகன பதிவிற்கு அதன் உரிமையாளர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
இலவச சமையல் காஸ் மானியம், வருமான வரி தாக்கல், வங்கி கணக்கு, ரேஷன் கார்டு உள்ளிட்ட விவகாரங்களுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்து வருகின்றது. இறப்பு சான்றிதழ் பெறவும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தெலுங்கானா போக்குவரத்து துறை அமைச்சர் வாகன பதிவிற்கு அதன் உரிமையாளர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாக்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில்(தெலுங்கானா) சுமார் 95 லட்சம் வாகனங்கள் உள்ளது. அதேபோல், பெரிய அளவில் வாகன மாற்றம் நடைபெறுகிறது. வாகனங்கள் பதிவு மற்றும் வேறு ஒருவருக்கு மாற்ற ஆதார் எண்ணை கட்டாயமாக்குங்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.