பயங்கரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என BRICS தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் G20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரை சந்தித்து பேசினார். 


இந்த முத்தரப்பு சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.  இந்த சந்திப்பின் போது, தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு டொனால்டு டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.



மேலும் G20 உச்சி மாநாட்டை நடத்துவதற்காக அபேவுக்கு பிரதமர் மோடி பாராட்டுகள் தெரிவித்துள்ளார். மேலும் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ முடிசூட்டு விழாவில் இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பார் எனவும் அபோவிடம் மோடி தெரிவித்தார்.


இதன் பின்னர், ஒசாகா நகரில், 'பிரிக்ஸ்' அமைப்பு தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷ்ய அதிபர் புதின், பிரேசில் அதிபர், தென் ஆப்பிரிக்க அதிபர் ஆகியோர் இதில் பங்கேற்றனர். அப்போது, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மத்தியில் பேசிய மோடி, பயங்கரவாதம் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று குறிப்பிட்டார்.


“பயங்கரவாதத்தால், அப்பாவி மனித உயிர்கள் பலியாவதோடு, பொருளாதார வளர்ச்சி, சமூக ஸ்திரத்தன்மை கடுமையாக பாதிக்கப்படுகிறது. பயங்கரவாதம் மற்றும் இனவாதத்துக்கு கிடைக்கும் ஆதரவை நாம் தடுத்த நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.


மேலும் உலக வர்த்தக அமைப்பை வலுப்படுத்துதல், ஆற்றல் பாதுகாப்பை உறுதி செய்தல், உலக பொருளாதார வீழ்ச்சி, போட்டித்தன்மை உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் மோடி பேசினார்.