சிறையில் அடைக்கப்பட்ட காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க வேண்டும்: ராகுல் காந்தி
காஷ்மீரின் பிரதான அரசியல் தலைவர்கள் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுதில்லி: காஷ்மீரின் பிரதான அரசியல் தலைவர்கள் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்து பேசினார். அப்பொழுது காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அதிகாரம் அளிக்கும் 370 மற்றும் 35 ஏ-வது பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு கிளப்பியது.
ஏற்கனவே ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு பாதுகாப்பு பணிக்காக சுமார் 35000 வீரர்கள் அனுப்பப்பட்டு உள்ளனர். மேலும் அங்கு இருக்கும் முக்கிய அரசியல் கட்சியின் தலைவர்களை வீடுக்காவலில் வைத்தது மத்திய அரசு. மேலும் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதன் பின்னரே, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மக்களவையில் இன்று மக்களவையில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்துள்ளார். அதன் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும், இன்னும் காஷ்மீரின் பிரதான அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி,
காஷ்மீரின் பிரதான அரசியல் தலைவர்கள் இரகசிய இடங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் ஜனநாயக விரோதமானது.
இது குறுகிய பார்வை மற்றும் முட்டாள்தனமானது, ஏனெனில் இது இந்தியாவில் பயங்கரவாதிகளை அனுமதிக்கவும், உருவாக்கவும் வழிவகுக்கும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.