இந்தியாவில் ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதை அடுத்து, கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து ரூ. 68.83 ஆக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளிநாட்டு பங்குச் சந்தைகளின் வளர்ச்சி மற்றும் இந்தியாவில் இருந்து அந்நிய நிதியை திரும்பப் பெறுவது போன்ற காரணங்களால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது.  இன்றைய பிற்பகல் வர்த்தகத்தின் போது , ரூபாய் மதிப்பு 2.5 சதவீதம் என்ற அளவிற்கு சரிந்து 68.86 என்ற நிலையை எட்டியது. 


2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 68.85 வீழ்ச்சி அடைந்ததே மிகப் பெரிய வீழ்ச்சியாக கருதப்பட்டது. அடுத்த 3 மாதங்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிய வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட பின்னர் இந்திய ரூபாயின் மதிப்பு 2.92 சதவீதம் குறைந்துள்ளது.


நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் தடையானது இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பயத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை திரும்பப் பெறுவதும், அமெரிக்க கடன் பத்திரங்கள் நல்ல லாபத்தைஈட்டுவதும் இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணங்களாக பார்க்கப்படுகிறது.