பிரதமர் மோடியின் பெயரை கெடுக்கவே பாக்கிஸ்தான் பத்திரிக்கையாளர் டைம்ஸ் பத்திரிக்கையில் தவறான கட்டுரை வெளியிட்டுள்ளார் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபலங்கள் பலர் சர்வதேசப் பத்திரிகைகளில் இடம்பெறுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை என்றாலும் குறிப்பிட்ட அந்த பிரபலம் குறித்தான கட்டுரை அந்தப் பத்திரிகையில் ஏற்றிருக்கும் நிலைப்பாடு விவாதிக்கத்தக்க வகையிலாக அமைந்துவிடுகிறது.


அந்த வகையில் தற்போது பிரபல அமெரிக்க பத்திரிக்கையில் (டைம்ஸ்) ‘பிரிவினைவாதிகளின் தலைவர்’ என்ற பெயரில் பிரதமர் மோடி குறித்தான கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. பொதுத் தேர்தலுக்கான இரண்டுகட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் இந்த கட்டுரை வெளியாகியுள்ளது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.


“பிரபலங்களுக்கு அடிபணிந்துபோன ஜனநாயகங்களில் முதன்மையாக இந்தியா இருக்கும். மோடியின் கடந்த ஐந்தாண்டுக்கால ஆட்சியில் இந்தியா பல வகைகளில் பிரிந்து கிடக்கிறது. மாட்டுக்கறிப் படுகொலைகள், 2017-ஆம் ஆண்டு யோகி ஆதித்யநாத்தை உத்தரப்பிரதேச முதல்வராக அறிவித்தது, அண்மையில் சாத்வி பிரக்யாவை வேட்பாளராக அறிவித்தது எனப் பல எதிர்மறை அம்சங்கள் என மோடி ஆட்சி குறித்து இந்த கட்டுரையில் விவாதிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக கடந்த 2015-ஆம் வருடம், மோடி பிரதமரான ஒரு வருடத்தில்  அவரது பேட்டி ஒன்றை வெளியிட்ட டைம்ஸ் பத்திரிகை அவரை ‘டைம்ஸ் டாப் 100 மனிதர்கள்’ பட்டியலிலும் சேர்த்தது. தற்போது தலைகீழாகக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருப்பது பரபரப்பாகி இருக்கிறது. இந்த கட்டுரை தற்போது எதிர்கட்சிகளுக்கு விமர்சன பொருளாய் மாறியுள்ள நிலையில்., இக்கட்டுரையின் ஆசிரியர் ஒரு பாக்கிஸ்தானியர் எனவும், அதன் காரணமாகவே மோடியின் பெயரை சிதைக்க இவ்வாறு செய்துள்ளார் எனவும் பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையானது அத்தீஷ் தசீர் என்பவரால் எழுதப்பட்டது. இவர் பிரபல இந்திய பத்திரிக்கையாளர் தால்வீன் சிங் மற்றும் பாக்கிஸ்தான் அரசியல்வாதி சல்மான் தசீர் தம்பதியருக்கு மகனாய் பிறந்தவர். அத்தீஷ் இந்திய நாட்டில் வளர்ந்தவர், இந்தியர் என அடையாளபடுத்த படுபவர், எனினும் அவரது தந்தை பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பதால் இவ்வாறு அவதூறு பரப்பி வருகின்றார் என பாஜக செய்தி தொடர்பாளர் சமீப் பத்ரா தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், மோடி பிரதமராக பதவி ஏற்ற காலத்தில் இருந்து பல சர்வதேச பத்திரிகைகளில் அவர் படைத்த சாதனைகள் பற்றியும், மோடியால் கொண்டு வரப்பட்ட பொருளாதார வளர்ச்சி பற்றியும் பேசப்படுகிறது. இந்நிலையில் தற்போது அத்தீஷ் பரப்பி வரும் இந்த அவதூறு மக்களின் மனதில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது எனவும் தெரிவித்துள்ளார்.