ராஜஸ்தான் நாகூரில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பலி; 9 பேர் காயம்
ராஜஸ்தானின் நாகூர் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் உயிரிழப்பு மற்றும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
புதுடெல்லி: ராஜஸ்தானின் நாகூர் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) இரண்டு மினி பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை மற்றும் நான்கு பெண்கள் உட்பட 11 பேர் பலியாகினர் மற்றும் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது.
இந்த இரண்டு பேருந்துகள் மகாராஷ்டிராவின் லாத்தூர் மற்றும் ஷோலாப்பூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தன. அவர்கள் ஆன்மீக குருவைச் சந்திக்க ஹரியானாவின் ஹிசார் சென்று கொண்டிருந்தனர்.
குச்சமான் நகரத்திற்கு அருகே ஒரு பேருந்து ஹனுமங்காத் மெகா நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, சாலையில் இருந்த ஒரு காளையைப் பார்த்த ஓட்டுநர், அதனை காப்பாற்றும் முயற்சியில், பேருந்தை உனடியாக திருப்பியதால், பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதியது. இதனால் அந்த பேருந்தின் பின்னால் வந்த மற்றொரு பேருந்தின் ஓட்டுநரும் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது மோதினார்.
இதனால் மரத்தில் மோதிய பேருந்தின் மீது பின்னல் வந்த பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஒரு குழந்தை மற்றும் நான்கு பெண்கள் உட்பட 11 பேர் பலியாகினர் எனக் கூறப்பட்டு உள்ளது. இதுவரை காயமடைந்த ஒன்பது பேரில் 6 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ளவர்கள் கச்சுமனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் உடனடியாக சம்பவ இடத்தை அடைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.