பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் எண் கேட்கக் கூடாது என ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அது வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.


சமீபத்தில் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் மருத்துவக் காப்பீடு பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக ஆதார் எண் கேட்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, ஆதார் எண் இல்லை என்பதற்காக மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதை தவிர்க்கக் கூடாது என்று பள்ளிகளுக்கு ஆதார் எண்ணை வழங்கும் தனிப்பட்ட அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து விளக்கம் அளித்த ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே, பள்ளி மாணவர் சேர்க்கை உள்ளிட்டவற்றுக்காக ஆதார் எண்ணை கேட்கக் கூடாது என்று தெரிவித்தார். பள்ளிகளில் சேர்க்கப்பட்ட பின்னர், சிறப்பு முகாம்களை நடத்தி, மாணவர்களுக்கு ஆதார் எண் கிடைப்பதை உறுதிப்படுத்தலாம் என்று தெரிவித்தார். ஆதார் எண் இல்லை என்பதற்காக மாணவரை பள்ளியில் சேர்க்க மறுத்தால், அது நீதிமன்ற அவமதிப்பு என்று அஜய் பூஷண் தெரிவித்தார்.