உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்குக் கோயில் எழுப்ப வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், உலகிலேயே மிக உயரமான ராமர் சிலைக்கும் பணியில் உத்திர பிரதேச அரசு இறங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமையவிருக்கும் ராமர் சிலை குறித்த அதிகாரப்பூர்வ விரங்களை உத்தரப்பிரதேச அரசு நேற்று இரவு வெளியிட்டது.


இந்த அறிவிப்பின்படி சுமார் 221 மீட்டர் உயர ராமர் சிலை அயோத்தியில் அமைப்பது என்று நேற்று இரவு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக உத்திரபிரதேச அரசு செய்தித் தொடர்பாளர் அவினேஷ் குமார் தெரிவிக்கையில்.. "அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் 151-மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கப்படும். அதில் படிக்கட்டுகள் மட்டும் 50 அடி உயரத்தில் இருக்கும். தலையில் வைக்கப்படும் கிரீடம் 20 மீட்டர் உயரத்தில் இருக்கும். ஒட்டுமொத்தமாக ராமர் சிலையின் உயரம் 221 மீட்டர் உயரத்தில் இருக்கும். இந்தச் சிலை முழுவதும் வெண்கலத்தால் உருவாக்கப்படும். மேலும், சிலையைச் சுற்றி பக்தர்கள் தங்குவதற்கு ஏதுவாக விடுதிகள், சரயு நதிக்கரையில் குருகுலம், சிலையைச் சுற்றி பூங்காக்கள் அமைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.


சிலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இன்று விஸ்வ இந்து பரிசத் சார்பில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி தர்ம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதேபோல, சிவசேனாக் கட்சியும் சரயு நதிக்கரை ஓரத்தில் தனியாகக் கூட்டம் நடத்துகிறது. 


இதன் காரணமாக அயோத்தியில் பாதுகாப்பு நிலை பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான காவலர்கள் மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.