தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியா நடவடிக்கைக்கு US முழு ஆதரவு: அஜித் டோவல்
பாகிஸ்தான் மண்ணில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாமுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு!!
பாகிஸ்தான் மண்ணில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாமுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு!!
ஜம்மு- காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில், கடந்த 14- ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட தாக்குதலில்CRPF வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டுவரும் ஜெய்ஷ்-இ-முகம்மது எனும் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டது. இதையடுத்து, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நேரம், இடத்தை இந்திய ராணுவமே முடிவு செய்து கொள்ளலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருந்தார். இந்த நிலையில் புல்வாமாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரும் வகையில், இந்திய -பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதையடுத்து, கடந்த பிப்ரவரி 26 ஆம் அதிகாலை 3.30 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், தீவிரவாத முகாம்கள் மீது சக்தி வாய்ந்த குண்டுகள் வீசிப்பட்டன. 12 மிராஜ் 2,000 ரக போர் விமானங்கள் இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை சுமார் 1,000 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை வீசியதில் தீவிரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிந்தன. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு உலக நாடுக தங்களின் ஆதரவை இந்தியாவுக்கு தெரிவித்தது.
இதை தொடர்ந்து, பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா பாராட்டும், ஆதரவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோ, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை பிப்ரவரி 27 ஆம் தேதி இரவு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது, பாகிஸ்தான் மண்ணில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்களை அழித்து, பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக மைக் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் நேற்று பாகிஸ்தானின் பிடியில் சிக்கிக்கொண்டார். அவரை மீட்கும் முயற்சியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அபிநந்தன் பாதுகாப்பாக இருப்பதாக பாகிஸ்தான் நேற்று வீடியோ வெளியிட்டது. அபிநந்தனை பாதுகாப்பாக விடுவிக்க வேண்டும் என்று உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.