வானிலை அறிக்கை... இந்தியாவில் ‘இந்த’ மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசும்...!
India Weather Forecast: இந்தியாவில் தற்போது வெப்பம் நிலவி வருவதாகவும், அடுத்த 4-5 நாட்களில் இது மேலும் அதிகரிக்கலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் நரேஷ் குமார் தெரிவித்தார்.
India Heatwave Alert: இந்தியாவில் தற்போது வெப்பம் நிலவி வருவதாகவும், அடுத்த 4-5 நாட்களில் இது மேலும் அதிகரிக்கலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் நரேஷ் குமார் தெரிவித்தார். கிழக்கு இந்தியாவில் வெப்ப அலைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. மேலும், டெல்லி - NCR பகுதியில் வெப்பநிலை ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் நரேஷ் குமார், “வரவிருக்கும் 2 முதல் 3 நாட்களில் டெல்லியில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை (ஏப்ரல் 23, 2024) டெல்லி - NCR பகுதியில் மழை பெய்யக்கூடும் என்றும், கிழக்கு இந்தியாவின் பல இடங்களில், வரும் 4 முதல் 5 நாட்களில் 44 டிகிரி செல்சியஸை எட்டும்” என்றார்.
தென் மாநிலங்களில் வானிலை நிலவரம்
தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெப்பம் மற்றும் ஈரப்பதத்துடன் கூடிய வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக டாக்டர் நரேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21, 2024) இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் இருந்தது. அதே நேரத்தில், பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட நான்கு முதல் ஆறு டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது என்றார்.
தமிழகத்தில் வானிலை நிலவரம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தமிழக வானிலை அறிக்கை கூறுகிறது.
வெப்ப அலை குறித்த அலர்ட்
IMD அறிக்கையில், அதிகபட்ச வெப்பநிலை ஒடிசா மற்றும் ராயலசீமா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், விதர்பா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் 42 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. பீகார், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை நீடித்தது. அதிகரித்து வரும் வெப்பநிலை தொடர்பாக மேற்கு வங்கத்தில் சிவப்பு நிற எச்சரிக்கையும், ஒடிசாவில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் - ஜூன் மாதங்களில் வானிலை கணிப்பு
ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4 முதல் 8 நாட்கள் வரை வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும், பொதுவாக ஒரு நாள் முதல் 3 நாட்கள் வரை வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமான நான்கு முதல் எட்டு நாட்களுடன் ஒப்பிடும் போது, வெப்ப அலையானது ஏப்ரல்-ஜூன் முழுவதும் பத்து முதல் 20 நாட்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்ப அலை நிலவும் பகுதிகள்
மத்தியப் பிரதேசம், குஜராத், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், மத்திய மகாராஷ்டிரா, விதர்பா, மராத்வாடா, பீகார் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வெப்ப அலை வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வெப்ப அலை 20 நாட்களுக்கு மேல் நீடிக்கும். அதீத வெப்பம் மின்கட்டமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி இந்தியாவின் சில பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தலாம். IMD உள்ளிட்ட உலகளாவிய வானிலை அமைப்புகளும் இந்த ஆண்டின் இறுதிக்குள் லா நினா நிலைமைகளை எதிர்பார்க்கின்றன.
மேலும் படிக்க | அமேதியை கைவிட்டது போல வயநாட்டையும் கைவிடுவார் ராகுல்: பிரதமர் மோடி ஆரூடம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ