நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்த பலனும் இல்லை என  பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2014ஆம் ஆண்டு முதன்முறையாக மோடி பிரதமரானபோது, திட்டக்குழுவுக்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கினார். இந்நிலையில், இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் நிதி ஆயோக் கூட்டம் வருகிற 15 ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. தற்போதைய நிதி ஆயோக் குழுவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். அந்தவகையில், நிதி ஆயோக் துணைத் தலைவராக ராஜிவ் குமார் தொடர்ந்து பணியாற்ற உள்ளார். சரஸ்வத், ரமேஷ் சந்த், வி.கே.பால் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீத்தாராமன், நரேந்திரசிங் தோமர், நிதின் கட்கரி, தாவார் சந்த் கெலாட், பியூஷ் கோயல், ராவ் இந்திரஜித் சிங் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். நிதி ஆயோக் குழுவில் அனைத்து மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருப்பார்கள். வருகிற 15ல் நடைபெறவுள்ள 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் விவசாயம், நீர்மேலாண்மை, தேச பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.


இந்நிலையில், இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக கூறி பிரதமர் மோடிக்கு மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அதில், மாநில திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க எந்தவித அதிகாரமும் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் பயனில்லை என கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.