மோடி vs யார்? எதிர்க்கட்சிகள் கூட்டணி எடுக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன?
Opposition Meeting in Bengaluru: எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்ட கட்சிகளின் பட்டியல் மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி எடுக்கக்கூடிய முக்கியமான சில விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
இன்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் 11.30 மணிக்கு தொடங்கியது. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரச்னைகளை முன்வைத்தனர். கூட்டணி எப்படி செயல்பட வேண்டும், அடுத்தக்கட்ட வியூகம் எப்படி வகுப்பது என்பது குறித்து கட்சித் தலைவர்கள் தன்கள் கருத்துகளை பகிர்ந்துக்கொண்டார். அப்பொழுது திமுக சார்பில் கருத்தை முன்வைத்த முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், "எதிர்க்கட்சிகளுக்குள் குறைந்தபட்ச பொது செயல் திட்டம் தேவை. ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது அவசியம்" என வலியுறுத்தினார். மேலும் இன்றைய எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவாக எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்க கூட்டணி (Indian National Developmental Inclusive Alliance) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பாஜகவுக்கு அச்சம் -மல்லிகார்ஜுன கார்கே
பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "மாநில அளவில் எங்களுக்குள் சில வேறுபாடுகள் இருப்பதை நாங்கள் அறிவோம். ஆனால் இந்த வேறுபாடுகள் பெரிதாக இல்லை, எங்களுக்குள் அரசியல் வேறுபாடுகள் உள்ளன. ஆனால் நாட்டைக் காப்பாற்ற நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். ஒவ்வொரு அமைப்பையும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதியைப் பாதுகாப்பதே இந்தக் கூட்டத்தை நடத்துவதன் பின்னணியில் உள்ள எங்களது நோக்கம். இன்று நாங்கள் இங்கு கூடியிருப்பது எங்கள் சொந்த நலனுக்காக அல்ல. நாட்டைக் காப்பாற்றுவதற்காக. மத்திய அரசின் தோல்விகளை அம்பலப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் லோக்சபா தேர்தலில் தோல்வி நிச்சயம் என பாஜக அச்சம் அடைந்துள்ளது. இன்றைய கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் கூட்டணி எடுக்கக்கூடிய முக்கியமான விஷயங்கள்:
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைவர் யார்?
சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவதாக ஆதாரங்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கு காரணம், அனைத்து கட்சிகளையும் சிறப்பாக வழி நடத்தி செல்வதில் சோனியாவுக்கு அனுபவம் அதிகம். மேலும் பாஜகவுக்கு அடுத்தப்படியாக தேசிய கட்சியாக இருப்பது காங்கிரஸ் தான். அந்தக் கட்சிக்கு சோனியா தான் தலைவர் மற்றும் அவரின் பெயரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க போவதில்லை என்பதும் முக்கிய காரணம். பாட்னாவில் நடந்த கூட்டத்தில் நிதிஷ்குமாரை கன்வீனராக்க சிலர் முன்மொழிந்தனர். ஒருவேளை நிதிஷ்குமாரை அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும் நிலையில், காங்கிரசும் ஏற்கலாம்.
பாஜகவுக்கு எதிராக வியூகம் வகுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்படலாம்:
2024 தேர்தலுக்கு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவார். எந்தெந்த பிரச்னைகளை எழுப்ப வேண்டும், என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் முடிவு செய்வார்கள்.
மக்களவை தேர்தல் வியூகம்: மோடி VS யார்? என்பதில் கவனம்:
பொதுத் தேர்தலை எதிர்க்கொள்ளும் போது, மோடி மற்றும் எதிர்கட்சிகள் கூட்டணி என்று கொண்டு செல்ல எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது இந்த தேர்தலுக்கு மோடி vs பொதுமக்கள் என்ற வடிவம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்கு, தற்போதைய பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என வியூகம் மேற்கொள்ளப்பட உள்ளது.
பாஜக மற்றும் மோடிக்கு எதிரான வியூகம்:
எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்தி செல்ல தலைவர் நியமிப்பதைத் தவிர, மேலும் 2-3 குழுக்களை அமைக்க யோசனை இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் மூலம் மோடிக்கு எதிராக எழுப்பப்படும் பிரச்னைகள் குறித்து முடிவு எடுக்கப்படும். எந்தெந்த விஷயங்களில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது என்பது குறித்து இந்தக் குழு முடிவு செய்யும். எந்தெந்த விஷயங்களில் நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது என்பதும் முடிவு செய்யப்படும். அதனால் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சனையை அவர்களுக்கு எதிராக பாஜக பயன்படுத்த முடியாது என கருதுகிறார்கள்.
2024 தேர்தலுக்கான இருக்கை பகிர்வு பார்முலா:
மாநிலங்களில் சீட் பகிர்வு பார்முலாவை முடிவு செய்யும் குழுவை அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையும் உள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே சந்திப்பை நடத்த முடியாது. அத்தகைய சூழ்நிலையில், அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு குழு உருவாக்கப்பட வேண்டும் எனவும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகத் தகவல்.
அதிக மாநிலங்களில் ஆட்சி செய்யும் பாஜக:
தற்போது நாட்டில் உள்ள 28 மாநிலங்களில் 10 மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஷிண்டே அணியுடன் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 4 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியும், 3 மாநிலங்களில் அக்கட்சியின் கூட்டணியும் உள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்ட கட்சிகளின் பட்டியல்:
1) காங்கிரஸ்
2) டி.எம்.சி
3) தி.மு.க
4) ஆம் ஆத்மி
5) ஜே.டி.யு
6) ஆர்ஜே டி
7) ஜே.எம்.எம்
8) என்சிபி
9) சிவசேனா - உத்தவ் தாக்கரே
10) எஸ்.பி
11) ராஷ்ட்ரிய லோக்தல்
12) அபான தளம் (காமராவாடி)
13) ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு
14) பிடிபி
15) சிபிஐ(எம்)
16) சிபிஐ
17) சிபிஐ (எம்எல்)
18) புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி
19) அகில இந்திய பார்வர்டு பிளாக்
20) ம.தி.மு.க
21) விடுதலை சிறுத்தைகள் கட்சி
22) கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
23) எம்எம்கே (மனிதனே மக்கள் கட்சி)
24) இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
25) கேரள காங்கிரஸ் - மணி
26) கேரள காங்கிரஸ் - ஜோசப்
மேலும் படிக்க - திமுக நல்ல கட்சியா...? அட்டாக் செய்த பிரதமர் - எதிர்க்கட்சிகள் கூட்டம் தான் காரணமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ