எல்லையில் பதட்டம் ஒரு பக்கம், பேச்சுவார்த்தை ஒரு பக்கம்: எதற்கு வலு அதிகம்?
பேச்சுவார்த்தையின் போது, ஜெய்சங்கர் கிழக்கு லடாக்கில், LAC-ல் அமைதியை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக அறியப்படுகிறது.
புதுடில்லி: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் (Dr. Jaishankar) மற்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி (Wang Yi) ஆகியோர் மாஸ்கோவில் வியாழக்கிழமை இரண்டு மணி நேர பேச்சுவார்த்தையை நடத்தினர். லடாக்கில் நீடித்து வரும் எல்லை பிரச்சனையை தீர்க்க ஐந்து அம்ச ஒருமித்த கருத்து ஒன்றுக்கு உடன்பாடு ஏற்பட்டது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தையின் போது, ஜெய்சங்கர் கிழக்கு லடாக்கில், LAC-ல் அமைதியை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக அறியப்படுகிறது. இந்தியாவின் நிலைப்பாட்டைக் கூறி, இந்தியப் படைகள் ஒருபோதும் LAC-ல் நிலைமையை மாற்ற முயற்சிக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.
"இப்பகுதிகளில் இத்தனை படைகளும் ராணுவ நிலைநிறுத்தங்களும் இருப்பது 1993 மற்றும் 1996 ஒப்பந்தங்களின்படி ஒத்துப்போகவில்லை. LAC-ல் இதனால் பதட்டமான சூழல் ஏற்படுகிறது. இந்த வரிசைப்படுத்தலுக்கு சீன தரப்பு நம்பகமான விளக்கத்தை வழங்கவில்லை,” என்று வெளியுறவு அமைச்சர் சீனாவிடம் தெரிவித்திருந்தார்.
சீனாவின் (China) அறிக்கையின்படி, வாங் ஜெய்சங்கரிடம் "இரு தரப்பினரும் செய்த உறுதிப்பாடுகளை மீறும் வகையில், துப்பாக்கிச் சூடு மற்றும் பிற ஆபத்தான நடவடிக்கைகள் போன்ற ஆத்திரமூட்டல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. நிலைமை மோசமடையாமல் இருக்க, எல்லைப்புற துருப்புக்களை பின்னுக்கு நகர்த்துமாறு சீன தரப்பும் இந்தியாவை (India) வலியுறுத்தியது என்றும் சீன அறிக்கை தெரிவித்தது.
ALSO READ: இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பயத்தில் அடக்கி வாசிக்கும் சீனா... !!!
எல்லையில் புதிய பதட்டங்களைப் பற்றி குறிப்பிடுகையில், "இந்தியா-சீனா உறவுகள் மீண்டும் ஒரு இக்கட்டான சூழலில் நிற்கிறது.” என்று வாங் கூறினார். "ஒத்துழைப்பு தேவை, மோதல் அல்ல" என்றும் அவர் கூறினார், அதே நேரத்தில் "இரண்டு பெரிய அண்டை நாடுகள் என்ற வகையில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இப்படிப்பட்ட வேறுபாடுகள் இருப்பது இயல்பானது" என்றும் சீன அமைச்சர் ஒப்புக் கொண்டார்.
கிழக்கு லடாக்கில் (Eastern Ladakh) எல்லை பதட்டங்கள் பெருமளவில் அதிகரித்துள்ள பின்னணியில் ஜெய்ஷங்கர்-வாங் இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. சமீப காலங்களில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே LAC-ல் புதிய பிரச்சனைகளும் பதட்டங்களும் அதிகரித்துள்ளன.
இரு நாட்களுக்கு முன்னர், கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் ஏரியின் தென் கரைக்கு அருகே சீனத் துருப்புக்கள் ஒரு இந்திய நிலைக்கு மிக அருகில் வர முயற்சித்ததாகவும், காற்றில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இந்திய இராணுவம் செவ்வாய்க்கிழமை கூறியது. 45 வருட இடைவெளிக்குப் பிறகு LAC-யில் இப்படி துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், LAC-ன் நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது என்றும், அரசியல் மட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் மிக, மிக ஆழமான உரையாடல்கள் ஏற்பட்டால் மட்டுமே நிலைமை சீராகும் என்றும் கூறினார்.
ALSO READ: LAC பதட்டங்களுக்கு மத்தியில் இந்தியா-சீனா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு!!