பிரதமர் மோடியின் கூட்டத்தில் நிதியமைச்சர் ஏன் பங்கேற்கவில்லை; வெளியான உண்மை!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்சியின் சில முக்கிய வேலைகளில் மும்முரமாக இருந்ததால், அவரால் இன்று நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார வல்லுனர்கள் கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியவில்லை.
புதுடெல்லி: இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையில் இன்று (வியாழக்கிழமை) பொருளாதார வல்லுனர்களுடன் இரண்டு மணி நேர சந்திப்பு நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பங்கேற்கவில்லை. அது ட்விட்டரில் பெரும் விவாதத்துக்கு உள்ளானது. நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, நிதியமைச்சர் கட்சியின் சில முக்கிய வேலைகளில் மும்முரமாக இருந்தார் என்றும், அதேநேரத்தில் ஏற்கனவே மற்ற வேலைகளுக்கு நேரம் ஒதுக்கி இருந்ததால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை எனக் கூறப்பட்டு உள்ளது.
அதாவது, பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை செய்த படங்களை பிஐபி ஊடகம் (PIB) ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது. இதற்கு பதிலளித்த ஒரு பயனர், 'நிர்மலா சீதாராமன் எங்கே?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் உயர்மட்ட பொருளாதார வல்லுனர்களுடனான சந்திப்பில் நிதியமைச்சர் இல்லாத நிலையில், மற்றொரு ட்விட்டர் பயனர், "சுப்பிரமணியன் சுவாமி ஏன் படத்தில் காணப்படவில்லை?" எனக் கேட்டிருந்தார்.
வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து கலந்துரையாடல்:
வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புடன் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 30-க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள், வங்கியாளர்கள், தனியார் பங்கு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்களுடன், நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி விவாதித்தார். கூட்டத்தில் முதலீடு, கடன் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
5 டிரில்லியன் டாலர் இலக்கு குறித்து பேச்சுவார்த்தை:
ஆதாரங்களின்படி, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு பொருளாதார வல்லுநர்களுடன் மோடி உரையாற்றினார். நுகர்வு மற்றும் தேவையை அதிகரிக்க பிரதமர் பரிந்துரை செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களும் கலந்துக்கொண்டனர்:
இந்த ஆலோசனை கூட்டத்தில் டி.இ.ஏ செயலாளர் அதானு சக்ரவர்த்தி, நிதி செயலாளர் ராஜீவ் குமார், என்ஐடிஐ ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், பிஎம்இஏசி தலைவர் பிபெக் டெப்ராய், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி நிர்வாகத் தலைவர் சரஞ்சித் சிங், இன்பியா தலைவர் கே.கே.ஆரின் சஞ்சய் நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர். வங்கி தலைமை நிர்வாக அதிகாரி சந்திர சேகர் கோஷும் பங்கேற்றார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.