10 ஆண்டுகளில் 8 முதியவர்களை திருமணம் செய்த பெண்: ஒவ்வொரு முறையும் பணம், நகையுடன் மாயம்!!
பணத்தாசை ஒரு மனிதனை எந்த தீய காரியத்தையும் துணிச்சலோடும் சலனமில்லாமலும் செய்ய வைத்து விடுகிறது. அப்படி பணத்தாசையில் புத்தி இழந்த ஒருவரைப் பற்றிய உண்மை சம்பவம் தான் இந்த செய்தி.
காஜியாபாத்: பணம் மனிதனை ஆட்டிப்படைக்கும் ஒரு முக்கியமான விஷயமாகும். பணத்தாசை ஒரு மனிதனை எந்த தீய காரியத்தையும் துணிச்சலோடும் சலனமில்லாமலும் செய்ய வைத்து விடுகிறது. அப்படி பணத்தாசையில் புத்தி இழந்த ஒருவரைப் பற்றிய உண்மை சம்பவம் தான் இந்த செய்தி.
திருமணத்தை தனது செல்வ சேமிப்பிற்கான பாதையாகக் கருதி, ஒரு பெண் கடந்த பத்து ஆண்டுகளில் எட்டு முதியவர்களை மணந்ததாகவும், அவர்களின் பணம் மற்றும் நகைகளுடன் மாயமானதாகவும் கூறப்படுகிறது. ஒரு திரைப்படம் போல் இருக்கும் இந்த உண்மை, சமீபத்தில் வெளி வந்தது. ‘லுட்டேரி துல்ஹான்’ அதாவது ‘திருட்டு மணமகள்’ என்ற பட்டப்பெயரைப் பெற்ற அந்தப் பெண், சமீபத்தில் உத்திர பிரதேசத்தின் காஜியாபாத்தைச் (Ghaziabad) சேர்ந்த 66 வயதான கட்டுமான ஒப்பந்தக்காரரை திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில வாரங்களுக்குளேயே 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டார்.
ஜுகல் கிஷோர் என்ற கட்டுமான ஒப்பந்தக்காரர், காசியாபாத்தின் கவி நகர் பகுதியில் வசிப்பவர். கடந்த ஆண்டு அவரது மனைவி காலமானதும், அவரது மகன் ஒரு தனி வீட்டில் வசிக்கத் தேர்ந்தெடுத்ததும், தனிமை அவரை கடுமையாக தாக்கக் காரணங்களாயின. டெல்லியைச் (Delhi) சேர்ந்த மேட்ரிமோனியல் ஏஜென்சி (Matrimonial Agency) - கன்னா விவாஹ கேந்திரா ஒரு செய்தித்தாளில் அளித்த ஒரு விளம்பரத்தை அவர் கண்டார். நிறுவனம், தனது விளம்பரத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் விவாகரத்து செய்யப்பட்ட நபர்களுக்கு உரிய துணையை தேடித் தருவதாக விளம்பரம் செய்திருந்தது.
கிஷோர் ஒரு இணைக்காக ஏங்கிக்கொண்டிருந்ததால், அவர் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டார். ஏஜென்சியின் உரிமையாளர் மஞ்சு கன்னா அவரை, அவருக்கு ஏற்ற மணமகளான மோனிகா மாலிக் என்பவருடன் அறிமுகம் செய்து வைத்தார். தான் விவாகரத்து பெற்றவர் என்று மோனிகா அவரிடம் கூறினார். சில வாரங்கள் சந்தித்து பேசிய பிறகு இருவரும் ஆகஸ்ட் 2019 இல் திருமணம் செய்து கொண்டனர்.
ALSO READ: மருத்துவமனையில் மலர்ந்த காதல் நோய்.... 70 வயது வாலிபரை ஈர்த்த 55 வயது மங்கை..!!!
இருவரும் கிஷோரின் கவி நகர் இல்லத்தில் ஒன்றாக வாழத் தொடங்கினர். இருப்பினும், கிஷோரின் திருமண இன்பம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. திருமணமான ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மோனிகா நகைகள் மற்றும் பணத்துடன் வீட்டிலிருந்து மாயமாக மறைந்துவிட்டார். அக்டோபர் 26, 2019 அன்று, மோனிகா 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் தப்பி ஓடிவிட்டதாக கிஷோர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கிஷோர் அந்த மேட்ரிமோனியல் ஏஜென்சியை தொடர்பு கொண்டார். ஆனால் அந்த ஏஜன்சி கட்டுமான ஒப்பந்தக்காரர் கிஷோரை மிரட்டியதோடு அதன் உரிமையாளர் கிஷோர் மீது பொய்யான வழக்கு பதிவு செய்வதாக அச்சுறுத்தினார். மேலும் கிஷோரிடம் அவர் பணத்தையும் கோரினார். பின்னர், கிஷோர் மோனிகாவின் முந்தைய கணவரைப் பற்றி கண்டுபிடித்தார். அவரும் இதேபோல் ஏமாற்றப்பட்டார் என்பதை அறிந்து கொண்டார்.
பின்னர் கிஷோர் போலீஸை அணுகி, மோனிகா மீது புகார் அளித்தார். ஆரம்ப விசாரணையின்போது, மோனிகா கடந்த 10 ஆண்டுகளில் எட்டு மூதியவர்களை இதே வகையில் ஏமாற்றியதாக போலீசார் கண்டறிந்துள்ளனர். திருமணத்திற்கு சில வாரங்களுக்குப் பிறகு, பணம் மற்றும் நகைகள் உள்ளிட்ட அவர்களின் மதிப்புமிக்க பொருட்களுடன் மறைந்துவிடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது திருமணங்கள் அனைத்தும் கன்னா விவாஹ கேந்திராவால் நிர்ணயிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
IPC பிரிவு 419 (ஆள்மாறாட்டம் மூலம் மோசடி), 420 (மோசடி), 380 (திருட்டு), 384 (மிரட்டி பணம் பறித்தல்), 388 (அச்சுறுத்தலால் மிரட்டி பணம் பறித்தல்) மற்றும் 120 பி (கிரிமினல் சதி) ஆகியவற்றின் கீழ் மோனிகா, அவரது குடும்பத்தினர் மற்றும் திருமண நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக எஸ்பி அபிஷேக் வர்மா தெரிவித்தார்.