ஆந்திராவில் உருவாகும் தேர்தல் கூட்டணி! பிரசாந்த் கிஷோரின் ஆருடம் பலிக்குமா? பொய்க்குமா?
2024 Lok Sabha Elections : ஆந்திராவில் சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் பிராந்திய கட்சியான தெலுங்கு தேசம் கட்சி பாஜக இடையே கூட்டணிக்கான வாய்ப்புகள் என்ன?
ஆந்திர பிரதேசத்தில் தேர்தல் களைகட்டிவிட்டது. பாஜக கூட்டணிக்காக, மூத்தத் தலைவர் அமித் ஷா நேற்று (வியாழக்கிழமை மார்ச் 7) தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆந்திராவில் இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ள நிலையில், சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் பிராந்திய கட்சியான தெலுங்கு தேசம் கட்சி பாஜக இடையே கூட்டணிக்கான வாய்ப்புகள் குறித்து இருவரும் கலந்தாலோசித்தார்கள்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தெலுங்கு தேசம் கட்சியும் இதற்கு முன்பு இருந்த போதிலும், சந்திரபாபு நாயுடு மாநில முதல்வராக இருந்த 2018 ஆண்டில் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
தற்போது மீண்டும் ஆந்திராவில் தங்கள் தடத்தை பதிக்கும் முனைப்பில் உள்ள கட்சிகள் தேர்தலில் ஒன்றிணைய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தில், பாஜக தலைவர் ஜேபி நட்டாவும் பங்கேற்றார். இரு கட்சிகளும் கூட்டணிக்கு தயாராக உள்ள நிலையில், ஏற்றுக்கொள்ளக்கூடிய தொகுதி பகிர்வு ஏற்படுமா என்பதைப் பொறுத்தே பாஜகவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்கும்.
ஆனால், ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மாநிலத்தில் வலுவாக இருக்கும் நிலையில், இந்த இரு கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் தான் வெற்றிக்கான வாய்ப்புகள் திறக்கும். இல்லாவிட்டால், தென்னிந்தியாவில் கால் பதிக்க நினைக்கும் பாஜகவின் கனவு நனவாகாது.
எனவே, பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்களுக்கிடையிலான இரண்டாவது சந்திப்பே கூட்டணியை முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்
தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் கூட்டணி அமைப்பதில் மேலும் தாமதம் செய்வது பலனளிக்காது என்றும், தாமதமாக கூட்டணியை முடிவு செய்வது என்பது, கட்சி தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் குழப்பமடையச் செய்யும் என்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் கருதுகின்றன.
ஆந்திராவில், நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான மற்றொரு ஜன சேனா கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உறுப்பினராக உள்ளது மற்றும் ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியுடன் கைகோர்த்துள்ளது. எனவே, மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிற கட்சிகள் ஒன்று திரள்வது உறுதியாகிறது.
நேற்று அமித்ஷா மற்றும் சந்திரபாபு நாயுடு சந்தித்தபோது, பவன் கல்யாணும் பங்கேற்றார். இந்த கூட்டத்திற்கு முன்னதாக, சந்திரபாபு நாயுடு முன்னதாக தெலுங்குதேசம் கட்சியின் எம்.பி.க்கள் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனிடையே, இந்த தேர்தலில் ஆளும் கட்சி மீண்டும் ஆந்திர மாநில சட்டசபையை கைப்பற்றுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. ஏனெனில், ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரசாந்த் கிஷோர் கூறிய கருத்துக்கள் மாறுபட்டு இருக்கிறது. 2019ஆம் ஆண்டில் நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, அந்தக் கட்சிக்கு அரசியல் வியூகம் அமைத்துக் கொடுத்தவர் தான் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்.
ஆனால், இந்த முறை நடக்கும் ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றியடைவது என்பது எளிதல்ல என்று அவர் கூறியிருப்பது அரசியலில் காற்று மாறி வீசும் என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது. "ஜெகன் தோற்கடிக்க முடியாத அளவுக்கு வலிமையானவர் அல்ல’ என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ