குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த 18 எளிய வழிகள்
குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த சில எளிய வழிகளை கரிசல் எழுத்தாளரும், சிறார் எழுத்தாளருமான உதயசங்கர் பகிர்ந்துகொண்டார்.
குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த சில எளிய வழிகளை கரிசல் எழுத்தாளரும், சிறார் எழுத்தாளருமான உதயசங்கர் பகிர்ந்துகொண்டார். மாயக்கண்ணாடி, ஆதனின் பொம்மை, குட்டி இளவரசனின் குட்டிப்பூ, மாயாவின் பொம்மை, சூரியனின் கோபம், விரால் மீனின் சாகசப்பயணம், புலிக்குகை மர்மம், பேசும் தாடி உள்ளிட்ட பல சிறுவர் நூல்களை எழுதியுள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள 18 எளிய வழிகள்:
1. வீட்டில் குழந்தைகள் கண்ணில் படுகிற மாதிரி புத்தகங்கள் கிடக்க வேண்டும்.
2. அம்மா அல்லது அப்பா தினம் குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தைகளின் முன்னால் வாசிக்க வேண்டும்.
3. குழந்தைகளிடம் உரையாடிக் கொண்டே வாசிப்பது நல்லது.
4. புத்தகங்களை வாசித்துக் கொண்டே குழந்தைகளுக்குக் கதை சொல்ல வேண்டும்.
5. கதை சொல்லும்போது புத்தகத்தை அடிக்கடி பார்த்துவிட்டு கதை சொல்ல வேண்டும்.
மேலும் படிக்க | தமிழ் தான் இணைப்பு மொழி...தெறிக்கவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்...
6. அப்படிக் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது இடையில் விரித்து வைத்த புத்தகத்தை அப்படியே குழந்தையிடம் விட்டு விட்டு எழுந்து சென்று கவனிக்க வேண்டும். குழந்தை அந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும்.
7. குழந்தைகள் புத்தகங்களில் கிறுக்கினாலோ கிழித்தாலோ திட்டவோ மிரட்டவோ கூடாது.
8. குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு புத்தகங்களில் உள்ள கதைகளைச் சொல்ல வேண்டும்.
9. குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது ஏனோ தானோ என்றோ தாங்கள் சின்ன வயதில் கேட்ட கதைகளையோ சொல்லாமல் நாமும் அதில் ஒன்றிக் குழந்தைகளின் கண்களைப் பார்த்துக்கொண்டு அபிநயம் பிடித்துக் கொண்டு சொல்ல வேண்டும்.
10. இவை எல்லாவற்றுக்கும் முதலில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி முதலில் அம்மாவும் அப்பாவும் வாசித்து விடுவது நல்லது. குழந்தைகளை வைத்துக்கொண்டு எழுத்துக் கூட்டி வாசித்துக் கொண்டிருக்கக் கூடாது.
11. குழந்தைகள் தமிழ்ப் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தமிழ் மொழி, தமிழினம், பாதுகாக்கப்படுகிறது என்ற உணர்வு பெற்றோர்களுக்கு வேண்டும்.
12. எனக்கு என்னுடைய அம்மா தான் வாசிப்பின் ருசியை ஊட்டிவிட்டவர். வீட்டில் வாங்கிய வணிகப் பத்திரிகைகளின் வழியாக வாசிப்பை மேம்படுத்திக் கொண்டேன்.
13. பள்ளியில் இருந்த நூலக வகுப்பு, நீதி போதனை வகுப்பு, அதில் கிடைத்த உண்மையான குழந்தைக் கதைகள் என்னிடம் வாசிப்பிற்கான தேடலை உருவாக்கியது.
14. என்னுடைய நண்பர்கள் புத்தகங்களை வாசிக்கிற, நூலகத்துக்கு செல்கிற நண்பர்கள். அவர்களுடனான உரையாடல் சிறுவயதிலேயே வாசிப்பதற்கும், எனக்கென்று புத்தகங்களை வாங்கவும், பதுக்கவும், திருடவும்கூட செய்யவைத்தது.
15. விளையாட்டு சாமான்களைத் தயக்கமில்லாமல் வாங்கிக் கொடுப்பதைப் போலப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கவும் அந்தப் புத்தகங்களை வைத்துக்கொள்ள வீட்டிலுள்ள அலமாரியில் சிறு இடம் ஒதுக்கிக் கொடுக்கவும் வேண்டும்.
16. எக்காரணம் கொண்டும் புத்தகங்களை முன்வைத்து குழந்தைகளிடம் சிறு முகம் சுளிப்பைக்கூட காட்டக்கூடாது.
17. தினமும் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். குழந்தைகளுக்கு அப்படியொரு டார்லிங் ஆகிவிடுவீர்கள்.
18. கதைகள் அத்தனை வலிமையானவை. மனித மனதை மயக்கிவிடும் மாயம் கொண்டவை.
இவ்வாறு எழுத்தாளர் உதயசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தானா? - முதல்வர் மு.க.ஸ்டாலின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G