மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 3-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜெயினாலுபுதீன் - ஆஷியம்மாளுக்கு 7 வது மகனாக பிறந்தவர். தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, தனது அசாத்திய திறமையாலும் கடின உழைப்பாலும் ஏவுகணை விஞ்ஞானியாக நாட்டுக்கு அரிய கண்டுபிடிப்புகளை வழங்கினார் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.


இவர் படகோட்டியின் மகன், பண்பாளர், ஏவுகனை விஞ்ஞானி, மக்கள் ஜனாதிபதி, சிறந்த நிர்வாகி, குழந்தைகளின் ரோல்மாடல் என பல பரிமாணங்களை கொண்டிருந்தார். ராமேஸ்வரத்தில் ஆரம்ப கல்வியும், திருச்சி, ராமநாதபுரம் போன்ற இடங்களில் மேற்படிப்பையும் முடித்த அவர், சென்னை எம்.ஐ.டியில் விமான தொழில்நுட்ப கல்வியை முடித்தார்.


மேலும் கலாம் தனது கடுமையான உழைப்பால் ஆராய்ச்சிப் பணிகளில் பல சாதனைகளை புரிந்தார். அக்னி ஏவுகனை சோதனைக்குப் பின் உலகம் முழுவதும் அறியப்பட்டார். இவருடைய சாதனைகளால் பத்ம பூஷன், பத்ம விபூஷன் என விருதுகள் அவரை  தேடி வந்தன. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்ற உன்னத மனிதர் அப்துல் கலாம் ஆவார்.


இந்த சாதனைகளை தொடர்ந்து அப்துல் கலாம் 2002 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி நாட்டின் 11-வது ஜனாதிபதியாக பதவியேற்றார். தனது பணி முடியும் வரை மக்களின் ஜனாதிபதி என பெயர்பெற்றவர். குழந்தைத்தனமான குரல் வளத்தை கொண்டிருந்த கலாம், தமது பதவிக்காலத்திலும் பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.


2015 ஆம் ஆண்டு, இதே நாளில் "அருமை மாணவர்களே" என்ற இறுதிச் சொற்களுடன் அவரின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு சாதி, மத, இன, பேதமின்றி இந்தியர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். அறிவியல் அன்றி வேறு எந்த ஒரு இயக்கமும் சாராத அவரின் காலம் ஒரு பொற்காலம் எனலாம்.


2020 என்ற தொலைநோக்கு பார்வையுடன் பயணித்த அவரது கனவுகளை ஏந்தி, ராமேஸ்வரம் அருகே பேய்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் பலர் நினைவஞ்சலி செலுத்துகின்றனர்.