விடுமுறை தினமான இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து 48 நாள்களுக்குப் பக்தர்களுக்கு அருள்புரிவதால், பெருமாளை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஜூலை 1 ஆம் தேதி முதல் காட்சியளிக்க தொடங்கிய அத்தி வரதர், தொடர்ந்து 28வது நாளான இன்று அத்திவரதர் இளம் நீலம் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இன்று வார விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.


நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்று மட்டுமே  2.30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்றைய தினமும் கூட்டம் அதிகமாகவே காணப்படும் என்பதால் போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


இதுவரை பொது தரிசனத்துக்காக 3 வரிசையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இன்று முதல் கிழக்கு கோபுர வாயில் வழியாக 5 வரிசையில் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அத்திவரதர் தரிசனத்துக்காக கோவிலில் குவிந்துள்ளனர்.