போலி Number plate-களைத் தடுக்க மத்திய அரசின் புதுதிட்டம்!
போலி நம்பர் பிளேட்டுகளைத் தடுக்கும் வகையில், வரும் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட நம்பர் பிளேட்டுகள் பொருத்துவது கட்டயாமாக்கப்பட்டுள்ளது!
புதுடெல்லி: போலி நம்பர் பிளேட்டுகளைத் தடுக்கும் வகையில், வரும் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட நம்பர் பிளேட்டுகள் பொருத்துவது கட்டயாமாக்கப்பட்டுள்ளது!
மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இதுதொடர்பான அறிவிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். இந்த அறிவிப்பின்படி வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் குரோமியம் பூச்சு கொண்ட ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் வாகனத்தின் முன்பக்க, பின்பிக்க நம்பர் பிளேட்டுகளில் ஒட்டப்படும். மேலும் வாகனத்தின் எண் லேசர் ஒளிக்கற்றை மூலம் பொறிக்கப்பட உள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதன் படி வரும் 2019 ஏப்ரல் 1-ஆம் நாள் முதல், வாகன உற்பத்தியாளர்கள், டீலர்கள் தாங்கள் விற்பனை செய்யும் வாகனங்களில் உயர் பாதுகாப்பு அம்சம் கொண்ட நம்பர் பிளேட்டுகள் பொருத்தி டீலர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உயர் பாதுகாப்பு அம்சம் கொண்ட நம்பர் பிளேட்டானது வாகனத்திலிருந்து அகற்ற முடியாததாகவும், மறுமுறை வேறு எவராலும் பயன்படுத்த முடியாத வகையிலும், வாகனத்துடனே பொருத்தும் வகையில் அமைக்கப்படும்.
ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங்களுக்கும் இந்த உயர் பாதுகாப்பு அம்சம் கொண்ட நம்பர் பிளேட்டை பொருத்தலாம். ஆனால், நம்பர் பிளேட் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மாநில அரசின் அங்கீகாரத்தை பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.
இந்த கட்டுப்பாட்டின் மூலம் வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளுக்கு பதில் அரிசயல் கொடிகளை அச்சிடுதல், மின்விளக்கு ஒளிரவிடுதல் போன்ற செயல்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.