ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் அதிகாரத்தை EC-க்கு வழங்க திட்டம்!
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் வகையில், தேர்தல் ஆணையத்துக்கு சட்ட அதிகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது!!
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் வகையில், தேர்தல் ஆணையத்துக்கு சட்ட அதிகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது!!
டெல்லி: ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான சட்டரீதியான அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை தயாரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதலை பெறும் முயற்சியில் சட்டத்துறை அமைச்சகம் தீவிரமாக உள்ளது. மத்திய அரசு முடிவு மூலம், வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து தங்கியுள்ளவர்களின் ஓட்டுரிமையை பறிக்கும் செயல் தடுக்கப்படும்.
போலி வாக்காளர்களை நீக்க இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தங்கள் தொகுதியில் பதிவு செய்திருந்தால் மட்டும் வாக்களிக்க முடியும். ஆதாருடன் இணைக்கப்பட்டால் அவர்களுக்கு இது வாக்களிக்க வாய்ப்பைத் தரும். தேர்தல் ஆணையத்துடன் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து சட்ட அமைச்சகம் நடத்திய ஆலோசனையை அடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு மூலம், பாதுகாப்பாக, மின்னணு முறையில் ஓட்டளிப்பது சாதகமாகும். மேலும், உள்நாட்டு தொழிலாளர்கள், வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள், தங்களது ஓட்டை பதிவு செய்வதற்கு உதவும். அவர்களின் அடையாளம் உறுதி செய்த உடன், தொழில்நுட்ப வசதிகளுடன் ஓட்டளிப்பது குறித்த வாய்ப்புகளை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 2015 ஆம் ஆண்டு, தேசிய வாக்காளர் பட்டியல் சீர்திருத்த திட்டத்தின்படி, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை துவக்கியது. 32 கோடி ஆதார் எண்களை இணைத்த நிலையில், ஆதார் பயன்பாட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றம் விதித்த கெடுபிடிகள் காரணமாக அந்த பணியை கைவிட்டது.
2004-05 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த சீர்திருத்தங்களை அமல்படுத்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். சட்ட செயலாளர் நாராயண் ராஜூ 40 சீர்திருத்தங்கள் பரிசீலினையில் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். புகைப்பட தேர்தல் ஆணைய அட்டையுடன் 12 எண் கொண்ட ஆதாரை இணைப்பதற்கு அரசு சாதகமான பதிலைத் தந்துள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் கடந்த ஆண்டு, ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்து, ஆதார் எண்களை சேகரிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக சட்டத்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் கடிதம் அனுப்பியது. இதனை கொள்கை அளவில் ஏற்று கொண்ட சட்டத்துறை அமைச்சகம், அமைச்சரவை ஒப்புதலுக்கு குறிப்பு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது.