கேட்ட வரத்தை உடனே அளிக்கும் சீரடி சாய்பாபாவின் மகிமை!
கேட்ட வரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் சீரடி பாபாவை ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும்.
சீரடி சாய்பாபா, பல கோடி மக்களின் மனதில் தெய்வமாக மட்டுமல்ல, தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல இடம் பிடித்துள்ளார். அவரை முழுமையாக, உறுதியாக நம்பியவர்களுக்கு நினைத்தது நடக்கிறது. இதனால் தான் ஊர் தோறும் சீரடி சாய்பாபாவின் ஆலயங்கள் உலகமே வியக்கும் வண்ணம் உருவாகி வருகின்றன.
இந்த பிறவியில் சீரடி சாய்பாபா (Sai baba) பற்றி அறிந்து உணர்ந்து, அவரது மகிமையை புரிந்து கொண்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள். எனவே இங்கே சாய்பாபாவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சீரடி சாய்பாபா மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் அல்லது குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.
Also Read | வடக்குத் திசையில் வைத்து குபேரனை வணங்கினால், செல்வ வளம் பெருகுமா?
ஒருமுறை நீதிமன்ற ஆணையர் அவரது வயதைக் கேட்டபோது லட்சக்கணக்கான வருடங்கள் என்று சாய் பாபா தெரிவித்திருந்தார். பக்தர்கள் பலர் திரட்டிய தகவல்களில் இருந்து சாய் பாபாவின் அவதார தினம் 1838 செப்டம்பர் 28 என தெரியவந்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கோதாவரி நதிக்கரையில் இருக்கும் சீரடி (Shirdi) எனும் அந்த கிராமத்தில் ஒரு பழமையான மசூதி ஒன்று இருந்தது. அந்த மசூதியின் பின்புறம் ஒரு வேம்பு மரம் ஒன்றும் இருந்தது. அந்த வேப்பமரத்தின் அடியில் ஒரு எட்டு வயதுச் சிறுவன் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தான். அந்த சிறுவனின் முகத்தில் தெய்வீக ஒளி வட்டம் ஒன்றிருப்பதைக் கண்ட அந்த கிராமத்துத் தலைவரின் மனைவி பாஜ்யாபாய் அந்த சிறுவனைக் கண்டு தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தாள். ஆனால் அந்த சிறுவன் அவருடன் வீட்டுக்குச் செல்ல மறுத்து அந்த இடத்திலேயே தியானம் செய்வதிலேயே ஆர்வம் கொண்டான்.
அந்தச் சிறுவன் தன்னுடன் வர மறுத்தாலும் அந்தச் சிறுவனிடம் ஏற்பட்ட பாசத்தால் அவனுக்குத் தினமும் உணவு கொண்டு வந்து கொடுப்பதாகவும் அதை மறுக்காமல் வாங்கிச் சாப்பிட வெண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். அதற்கு அந்தச் சிறுவனும் சம்மதித்தான். அந்தத் தாயும் சிறுவனுக்குத் தினசரி உணவு கொண்டு வந்து கொடுத்தாள். அந்தச் சிறுவனும் அதை வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வான். அவர்களுக்கிடையே தாய்- மகன் பாசம் மேலிட்டது. அந்த வேப்பமரத்தின் அருகிலிருந்த கந்தோபா எனும் கோவிலின் பூசாரி அந்தச் சிறுவனிடம் இருந்த தெய்வீக ஒளியைக் கண்டு அந்தச் சிறுவனை "சாய்" என்று அழைக்கத் துவங்கினார்.
சில காலத்திற்குப் பிறகு அந்தச் சிறுவன் அந்த ஊரை விட்டு வெளியேறினான். ஊர் ஊராக அலைந்து திரிந்த அந்தச் சிறுவன் அங்கிருந்த கோவில்களில் எல்லாம் வணங்கி வழிபாடு செய்தான். இப்படி அலைந்து கொண்டிருந்த சிறுவன் சாந்து பாட்டீல் எனும் வியாபாரியைச் சந்தித்தான். அந்தச் சிறுவனின் தெய்வீகத் தன்மையைக் கண்டு வியந்த அவர் தனது மகள் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினார். சிறுவனும் கலந்து கொள்வதாக உறுதியளித்தான். அந்தச் சிறுவன் அந்த வியாபாரியின் மகள் திருமணத்திற்காக அந்த வியாபாரியின் குடும்பத்தினருடன் சீரடிக்கு மீண்டும் வந்தான்.
அப்போது அந்த சிறுவனுக்கு வயது பதினாறு ஆகியிருந்தது. சீரடிக்குத் திரும்பிய அந்தச் சிறுவன் தான் முன்பு அமர்ந்திருந்த அந்த வேப்பமரத்தடியைத் தேடிச் சென்று அமர்ந்தான். கந்தோபா கோயில் பூசாரிக்கு வேப்பமரத்தடியில் முன்பு தியானம் செய்து கொண்டிருந்த அந்தச் சிறுவன் மீண்டும் திரும்பி வந்திருப்பதை அறிந்து கொண்டார். அந்தச் சிறுவன் அந்த வேப்பமரத்தடியை விட்டு வேறு இடத்தில் அமர மறுப்பதைக் கண்ட அந்த ஊர் மக்கள் அது பற்றி அவனிடமே கேட்டார்கள். அதற்கு அந்தச் சிறுவன் இந்த வேப்பமரம்தான் தனது குரு என்று பதில் அளித்தான். பின் அந்த மரத்தினடியில் ஒரு இடத்தைக் காட்டி அந்த இடத்தைத் தோண்டச் சொன்னான்.
Also Read | தேவலோக மரங்கள் எவை? அதன் சிறப்புகள் என்ன தெரியுமா?
அங்கு சிறிது ஆழம் தோண்டியதும் உள்ளே ஒரு சிறு அறையில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும் அந்த ஊர் மக்கள் வியந்து போனார்கள். அந்தச் சிறுவனைக் கடவுளின் அவதாரமாகக் கருதினார்கள். கடவுளைப் போன்று பூஜிக்கத் துவங்கினார்கள். அன்றிலிருந்து அந்தச் சிறுவன் அற்புதங்கள் நிகழ்த்தத் துவங்கினான். அந்தச் சிறுவன் கோவில் பூசாரி அழைத்த சாய் என்பதுடன் மக்கள் பாபா என்பதையும் சேர்த்து "சாய்பாபா" என்று அழைக்கத் துவங்கினார்கள் என்று கூறப்படுகிறது.
சாய்பாபா 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதியன்று சாய்பாபா சமாதி அடைந்தார். இன்றும் மக்கள் நம்பிக்கையோடு இங்கு வந்து சீரடிசாய்பாபாவை தரிசனம் செய்து செல்கிறார்கள்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR