திருமணத்தை ஆலயத்தில் நடத்துவது நல்லதா?.. மண்டபத்தில் நடத்துவது நல்லதா?..
திருமணத்தை ஆலயத்தில் வைத்து நடத்தினால் நல்லதா அல்லது திருமண மண்டபத்தில் வைத்து நடத்துவது நல்லதா?...
திருமணத்தை ஆலயத்தில் வைத்து நடத்தினால் நல்லதா அல்லது திருமண மண்டபத்தில் வைத்து நடத்துவது நல்லதா?...
அக்காலத்தில் திருமணத்தை தங்கள் இல்லத்தில் வைத்து நடத்தினார்கள். இன்னமும் கிராமப்புறங்களில் தங்கள் வீட்டுக்கு முன்னாலேயே பந்தல் அமைத்து திருமணத்தை நடத்துபவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு சொந்தமாக இடவசதி இல்லாதவர்கள் ஆலயங்களில் வைத்து திருமணத்தை நடத்தினார்கள். ஆலயத்தில் வைத்து திருமணம் நடக்கும்போது இறைவனின் சந்நதியில், அதாவது, இறைசக்தி நிறைந்திருக்கும் இடத்தில் தம்பதியர் தாங்கள் வாழ்வினில் இணையும்போது தவறு ஏதும் நடந்துவிடாமல் வாழ்க்கை சிறப்படையும் என்று நம்பினார்கள். நாளாக, நாளாக தற்காலத்தில் திருமண மண்டபங்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து வருகிறது.
திருமண மண்டபத்தில் வைத்து திருமணங்களை நடத்துவதில் தவறு இல்லை. ஆனால், சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் சரிவரச் செய்கிறோமா என்பதுதான் முக்கியம். மதச் சடங்குகளுக்கும், சம்பிரதாயங்களுக்கும் தரும் முக்கியத்துவமானது குறைந்து ஆடம்பரமும், அலங்காரமும் மட்டுமே பெருகி வருகிறது. மணவறைக்கு மணமக்களை வாழ்த்த வருபவர்கள் காலணிகளை அணிந்துகொண்டே மேடையேறி வருகிறார்கள். புகைப்படம் மற்றும் வீடியோவிற்காக செயற்கையாக சிரிக்கிறோம், நடிக்கிறோம்.
மாறாக சம்பிரதாயங்களில் நம் மனம் ஈடுபட மறுக்கிறது. ஹோமகுண்டத்தில் இருந்து எழும் புகையினால் புகைப்படம் தெளிவாக இருப்பதில்லை என்ற காரணத்திற்காக மணவறையில் இருந்து ஹோமகுண்டத்தை தனியாக எடுத்துச் சென்று ஒரு ஓரமாக வைக்கும் அவலம் நம்மை சிந்திக்க வைக்கிறது. இந்து மதத்தில் நடக்கின்ற எல்லா சடங்குகளுக்கும் அக்னியே பிரதானம்.
ALSO READ | இந்து திருமணத்தில் பட்டுப்புடவை உடுத்துவது எதற்காக தெரியுமா?
இவ்வாறு அக்னி சாட்சியாக நடக்கின்ற திருமணத்தில் அக்னியையே ஓரம்கட்டி அணைத்துவிடுகிறார்கள். இங்கே சாஸ்திர, சம்பிரதாயங்கள் முக்கியத்துவம் இழந்து வீண் ஆடம்பரம் மட்டுமே தலைதூக்குகிறது. சமீபத்தில் முகநூலில் வெளியான ஒரு கருத்து நம்மை சிந்திக்க வைக்கிறது. “இப்போதெல்லாம் திருமணத்திற்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பதை விட அவர்களை பிரமிக்க வைக்கும் முயற்சியில்தான் பெரும்பாலானோர் ஈடுபடுகிறார்கள்” என்ற இந்த கருத்தையும் மறுப்பதற்கில்லை.
ஆலயத்தில் வைத்து திருமணத்தை நடத்தினால் மணமக்களின் ஜாதகங்களில் ஏதோ தோஷம் இருக்கிறது, தோஷ நிவர்த்திக்காகத்தான் கோயிலில் வைத்து திருமணத்தை எளிமையாக முடித்துவிட்டார்கள் என்று வாய்கூசாமல் பேசுவோரும் இருக்கிறார்கள். கோயில் கல்யாணங்களில் வீண் ஆடம்பரம் இடம்பிடிப்பதில்லை. ஆலயங்கள் இறைவனின் இருப்பிடம் என்பதால் பயபக்தியுடன் சம்பிரதாயங்களில் நம் கவனத்தை செலுத்துகிறோம். கோயிலுக்குள் காலணி அணிந்துவந்து மணமக்களை வாழ்த்துவதில்லை.
இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆலயத்தில் வைத்து திருமணத்தை நடத்துவதே சிறந்தது என்று நமக்குத் தோன்றுகிறது. திருமண மண்டபத்தில் வைத்து திருமணத்தை நடத்துவது தவறு அல்ல; எங்கே நடத்துகிறோம் என்பது முக்கியமல்ல; எப்படி நடத்துகிறோம் என்பதே முக்கியம். குறைந்த பட்சம் முகூர்த்த நேரத்தில் மட்டுமாவது ஆடம்பர அலங்காரங்களுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்து சாஸ்திர சம்பிரதாயங்களில் கவனத்தை செலுத்துவோமேயானால் திருமணங்களை எங்கு வைத்து வேண்டுமானாலும் நடத்தலாம்.