பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. மதுரை அழகர்கோவில் கள்ளழகர் எழுந்தருளும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு இந்த விழாவானது கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 


திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி–சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும் , அதன் தொடர்ச்சியாக நேற்று காலையில் தேரோட்டமும் நடந்தது. 


சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர்  வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் தரித்து தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மதுரைக்கு புறப்பட்டு நேற்று காலை 6 மணி அளவில் மூன்றுமாவடியை அடைந்தார். பின்னர் நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். இரவு 12 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன்பின் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி கள்ளழகர் புறப்பட்டு, இன்று காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். 


ஆற்றில் இறங்கிய கள்ளழகர் காலை 7.25 மணி வரை அங்கேயே இருந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். வைகையாற்றில் கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் கள்ளழகரை தரிசித்து வருகின்றனர். அதிகாலையில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் அங்கு திரண்டனர். இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.