திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வரவு அதிகரித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் ஐந்து அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது. இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்வதால் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.


கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. தென் மேற்கு பருவ மழை காரணமாக கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியதும் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். குற்றாலத்தில் முக்கிய அருவி, ஐந்தருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, புலியருவி என 9 அருவிகள் உள்ளன. 


ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இம்மூன்று மாதங்களில் இங்கு சீசன் களைகட்டும். அந்த சமயத்தில் சாரல் மழையும், குளுகுளு காற்றும் வீசுவதால் அதை அனுபவித்து மகிழ பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இந்த மூன்று மாத காலத்தில் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். 


தென் மேற்கு பருவமழை தொடங்குவதில் இந்தாண்டு தாமதம் ஏற்பட்ட காரணத்தால் கடந்த சில நாட்களாக குற்றால அருவிகள் வறண்டு காணப்பட்டன. 


இந்நிலையில் தற்போது ஐந்தருவியில் தண்ணீர் விழத் தொடங்கியுள்ளது. இதனால் சீசனை அனுவிப்பதற்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிய தொடங்கியுள்ளனர்.