ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்களுக்கு கட்டணம் குறித்து தெளிவுபடுத்திய ரிசர்வ் வங்கி
இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் தொடர்பான விதிகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிக்கையை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி: ஏடிஎம் இயந்திரத்தில் நீங்கள் குறைந்த அளவில் டெபிட் கார்டு பயன்படுத்தும் நபர் என்றால், இந்த செய்தியை நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும். ஆம், இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் தொடர்பான விதிகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிக்கையை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் சார்பாக, வங்கி ஏடிஎம்களில் தோல்வியுற்ற பரிவர்த்தனைகள் அல்லது பணம் இல்லாமல் தோல்வியில் முடியும் பரிவர்த்தனை போன்றவை இலவச பரிவர்த்தனைகளின் கீழ் கணக்கிடப்படாது என்று கூறப்பட்டது.
வங்கிகள் ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுப்பதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்காமல் இலவசமாகவே கொடுத்து வந்தது. பின்னர் 5 முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், அதன்பிறகு எடுக்கப்பட்டும் ஒவ்வொரு முறைக்கும் வாடிக்கையாளர்ளிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்தன. சில வங்கிகள் இலவச பணம் எடுப்பதை மூன்றாக குறைத்தன. ஒவ்வொரு வங்கிகளும் கட்டணம் வசூலிப்பதில் பல்வேறு விதமான எண்ணிக்கையில் இலவச பரிமாற்றங்களை கொடுத்துவந்தன.
தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ அல்லது ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வெளியே வராமல், அந்த பரிவர்த்தனை தோல்வியில் முடிந்தாலோ அது இலவச பரிவர்த்தனைகளில் இருந்து கழித்துக் கொள்ளப்படுவதாக ரிசர்வ் வங்கிக்கு வங்கிக்கு நோட்டிஸ் அனுப்பியிருந்தது.
இந்தநிலையில், பிராந்திய கிராமப்புற வங்கி, நகர்ப்புற கூட்டுறவு வங்கி, மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சிறு நிதி வங்கி, கொடுப்பனவு வங்கி உள்ளிட்ட அனைத்து திட்டமிடப்பட்ட வணிக வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, கணக்கு வைத்திருப்பவருக்கு ஒவ்வொரு மாதமும் ஐந்து இலவச பரிவர்த்தனைகள் வழங்கப்படுகின்றன. ஏடிஎம்களில் தொழில்நுட்ப காரணங்களால் அல்லது பணப் பற்றாக்குறை காரணமாக, பரிவர்த்தனைகள் தோல்வியில் முடிந்தால், அது இலவச பரிவர்த்தனை கணக்கில் சேராது என்றுக் கூறியுள்ளது. மேலும் பணமில்லா பரிவர்த்தனைகளான சேமிப்பு விவரத்தை பார்த்தல், செக் புத்தகத்திற்கான வேண்டுகோள், வரி செலுத்துதல், பணம் அனுப்புதல் ஆகியவையும் (கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்களில்) இலவச வங்கி பரிவர்த்தனை கணக்குகளின் கீழ் வராது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
அதாவது, நீங்கள் இப்போது இதுபோன்ற பரிவர்த்தனைகளைச் செய்தால், உங்கள் 5 இலவச பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாது என தெளிவாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.