ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவது ஏன்.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாதா, பிதா, குறு, தெய்வம்.... என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் விழும்போது நம்மைப் பிடித்து, வாழ்க்கையின் மிக முக்கியமான பாடங்களை கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர் தினம் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 அன்று, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். ஆசிரியப் பணியை புனிதப் பணியாக கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக விளங்குவோரை சிறப்பிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 


அப்படி செயல்பட்டவர் தான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், மாபெரும் தத்துவ மேதையாக விளங்கினார். இவரை கவுரவப்படுத்தும் வகையில், ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். அதாவது கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.


திருத்தணி அருகே சர்வபள்ளி என்ற இடத்தில் 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி ராதாகிருஷ்ணன் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு பி.ஏ பட்டமும், எம்.ஏ பட்டமும் பெற்றவர். சென்னை பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். இந்து மத இலக்கியங்கள், மேற்கந்திய சிந்தனைகளையும் கற்றுத் தேர்ந்தவர்.


1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராக தேர்வானார். 1923 ஆம் ஆண்டு "இந்தியத் தத்துவம்" என்ற படைப்பை வெளியிட்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு மேடைகளில் மகத்தான சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.


1931 ஆம் ஆண்டு ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தர், 1939 ஆம் ஆண்டு பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக துணைவேந்தர், 1946 ஆம் யுனெஸ்கோ தூதுவராக நியமிக்கப்பட்டார். நாடு சுதந்திர அடைந்த பின், 1948 ஆம் ஆண்டு பல்கலைக்கழக கல்வி ஆணையத் தலைவரானார். அதன்மூலம் கல்வித்துறைக்கு சிறப்பான பங்காற்றினார். 1962 முதல் 1967ஆம் ஆண்டு வரை நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.