மக்களவை தேர்தல் குறித்து வாட்ஸ் ஆப்பில் போலிச் செய்திகளைக் கண்டறிய புதிய சேவை எண்ணை அறிமுகம் செய்துள்ளனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடுமுழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பிரட்சாரம் செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து, மக்களவை தேர்தலையொட்டி பரப்பப்படும் போலிச் செய்திகளை தடுக்கும்விதமாக, பல்வேறு நடவடிக்கைகளில் சமூக வலைதள நிறுவனங்கள் ஈடுபட்டுவரும் நிலையில், செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறிந்து கொள்ளும் விதமாக புதிய சேவை எண்ணை வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.


சமூகவலைதள நிறுவனங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது போலி செய்திகள். வைரல் எனும் பெயரில் வேகமாக தகவல் மற்றும் செய்திகள் சென்று சேர்கிறதோ இல்லையோ, போலி செய்திகள் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகின்றன. இதனால், ஏற்படும் பிரச்னைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போலி செய்திகள் பரவுவதை தடுக்க வேண்டும் என சர்வதேச அரசுகளும் சமூக வலைதள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளன.


இதனால், புதிய தொழில்நுட்ப உதவிகளை பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் நாடி வருகின்றன. அதன்படி, +91-9643-000-888 எனும் சேவை தொடர்பு எண் இந்திய பயனர்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் தங்களுக்கு வரும் செய்திகள் உண்மையானதா எனும் சந்தேகம் இருந்தால் இந்த சேவை எண்ணுக்கு அந்த செய்திகளை பயனர்கள் அனுப்பலாம்.


உண்மைத் தன்மையை கண்டறிவதற்காக ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள குழுவானது, அந்த செய்திகளை சோதனை செய்து அவற்றின் முடிவுகளை பயனர்களுக்கு திருப்பி அனுப்பும்.
ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, பெங்காலி மற்றும் மலையாள மொழிகளை உள்ளடக்கிய வீடியோக்கள், குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்பட செய்திகளின் உண்மைத் தன்மையை இந்த சேவை மூலம் பெறலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.