மதுரை கோர்ட்டில் நடிகர் தனுசுக்கு எதிராக மனு தள்ளுபடி!
நடிகர் தனுசுக்கு எதிராக கதிரேசன் தம்பதியினர், தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை, தள்ளுபடி செய்துள்ளது.
நடிகர் தனுசுக்கு எதிராக கதிரேசன் தம்பதியினர், தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை, தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன், எங்களுக்கு வயதாகி விட்டதால் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு பொய்யானது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகர் தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இவ்வழக்கின் முந்தைய விசாரணையின்போது, தனுஷ் படித்த கல்விச் சான்றிதழ்களை தனுஷ் மற்றும் கதிரேசன் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டன. இதில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 10-ம் வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை. கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து, கதிரேசன் மீனாட்சி தம்பதியினர், உயர்நீதிமன்றத்தில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை. எனவே, இந்த சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறினார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி கதிரேசன் தம்பதியினர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.