மலேசியா பொது தேர்தல்: எதிர்கட்சி வேட்பாளர் மஹத்திர் மொஹம்மத் வெற்றி
மலேசியா பொது தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹத்திர் மொஹம்மத் வெற்றியை பெற்றுள்ளார்.
தற்போதைய பிரதமரும் ஆளுங்கட்சி வேட்பாளருமான நஜீப் ரஸாக் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பை முறைப்படுத்தாமை என பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இதனால் கடந்த 22 ஆண்டுகள் மலேசிய பிரதமராக பதவி வகித்தவருமான் மஹத்திர் மொஹம்மத்(92), தனது அரசியல் ஓய்வை விலக்கிக் கொண்டு, நஜீப் ரஸாக்கை எதிர்த்து பொது தேர்தலில் போட்டியிட்டார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியுள்ள மலேசிய பொதுத்தேர்தல், அந்நாட்டு நேரப்படி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. தலைநகர் கோலாலம்பூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
மலேசியாவில் ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் எதிர்கட்சி வேட்பாளரான மஹத்திர் மொஹம்மத் கூட்டணி 115 இடங்களை வென்று பொது தேர்தலில் வெற்றி பெற்றது.