விசாரணைக்கு ஆஜராகும்படி முகமது ஷமிக்கு போலீசார் சம்மன்
நாளை மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி முகமது ஷமிக்கு கொல்கத்தா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
நாளை மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி முகமது ஷமிக்கு கொல்கத்தா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இந்திய வேகபந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவரது குடும்பத்தினர் என்னை கொடுமை படுத்துக்கின்றனர். என்னை கொல்ல சதி செய்கின்றனர். இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறேன் என ஹசின் ஜகான் செய்தியாளரிடம் கடந்த மாதம் முதல் வாரத்தில் கூறியிருந்தார்.
இதற்கு முகமது ஷமி, என் மீது வைக்கப்பட்ட அனைத்து விமர்சனமும் பொய். இது எனக்கு எதிராகவும், என்னை அசிங்கபடுத்தவும், என் விளையாட்டை கெடுக்கவும் முயற்சி செய்கிறார்கள் எனக் கூறியிருந்தார்.
இதனையடுத்து, முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் கொல்கத்தா போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த ஜனவரி மாதம் முதல் பாகிஸ்தானை சேர்ந்த அலிஷ்பா என்ற பெண்ணுடன் கள்ள உறவு கொண்டிருந்ததாகவும், மேலும் பல பெண்களுடன் இவருக்கு தொடர்பு உள்ளது எனவும், இங்கிலாந்தை சேர்ந்த முகமது பாயின் பேச்சை கேட்டு கொல்கத்தாவில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த அலிஷ்பா என்ற பெண்ணிடம் இருந்து முகமது ஷமி பணம் பெற்றுக் கொண்டதாக கூறியிருந்தார். மேலும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் புகாரில் கூறியிருந்தார்.
இதைக்குறித்து கொல்கத்தா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் முகமது ஷமி சூதாட்ட புகார் குறித்து பதில் அளிக்குமாறு பிசிசிஐயிடம் கொல்கத்தா போலீசார் கூறியிருந்தது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பிசிசிஐ, முகமது ஷமி எந்தவித சூதாட்டத்திலும் ஈடுபடவில்லை என கூறியிருந்தது. இதனையடுத்து, அவர் ஐபிஎல் 11_வது சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
அவரது மனைவி ஹசின் ஜகான் அளித்த புகாரின் அடிப்படையில், கொல்கத்தா போலீஸார் இன்று முகமது ஷமிக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் நாளை மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி கூறப்பட்டு உள்ளது.