இன்னும் மாறாத அரசு பள்ளிகளின் நிலை - வேதனையை வெளிப்படுத்திய நடிகர் சூர்யா
அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல இன்னும் இருக்கிறது என தனது வேதனையை வெளிப்படுத்திய நடிகர் சூர்யா.
சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் அகரம் அறக்கட்டளை சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது அகரம் அறக்கட்டளை கடந்து வந்த 10 ஆண்டுகள் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் அகரம் அறக்கட்டளை நிறுவனரும் நடிகருமான சூர்யா, அவரது சகோதரர், சூர்யாவின் தந்தை நடிகர் சிவக்குமார் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல இன்னும் இருக்கிறது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. நாம் யாரும் சுயம்பு கிடையாது. சமூகத்தில் இருந்து நிறைய எடுத்திருக்கிறோம். அதை திருப்பி அளிப்போம். நீங்கள் எந்தப் பள்ளியில் இருந்து படித்து வந்தீர்களோ, அந்தப் பள்ளிக்கு உதவுங்கள். கிராம சபைக்கு செல்லுங்கள். அந்த கிராமத்தில் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ளுங்கள். சமூகத்தை பற்றியும் யோசிப்பது தான் வாழ்க்கை எனக் கூறினார்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை சாதிப்பெயர் சொல்லி திட்டுவது போன்ற நிகழ்வுகள் வருத்தம் அளிக்கிறது. நாம் யாரை விடவும் உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ இல்லை. நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். சத்தியத்துடனும், உண்மையுடனும் உழைத்தால் மாணவர்கள் நல்ல நிலையை அடையலாம் என நிகழ்ச்சியில் பேசினார்.
அதேபோல நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி எத்தனை படங்களில் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்தாலும், சூர்யாவின் அடையாளம் "அகரம் அறக்கட்டளை", அதேபோல தான் கார்த்தியின் அடையாளம் "உழவன் பவுண்டேசன்" தான் என்றார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.