Dhanush Filed Case On Nayanthara And Netflix: ஆவணப்படத்தில் 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பு காட்சிகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது தொடர்பாக நடிகை நயன்தாரா, நெட்பிளிக்ஸ் நிறுவனம் உள்ளிட்டோருக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி  இன்று (நவ. 27) உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்திற்கான டீசர் வீடியோவில் நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்த 'நானும் ரவுடிதான்' படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.


தனுஷ் தரப்பில் மனு...


இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை நயன்தாரா நடிகர் தனுஷிற்கு கடிதம் எழுதி அதனை பொதுவெளியில் வெளியிட்டார். இந்த கடிதம் தென்னிந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, கடந்த நவ. 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான ஆவணப்படத்திலும் 'நானும் ரவுடிதான்' படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சிலவற்றை பயன்படுத்தியிருந்தனர். 


மேலும் படிக்க | நயன்தாராவை மிஞ்சிய நாக சைதன்யா... திருமண உரிமத்திற்கு இத்தனை கோடியா? கலக்கும் நெட்பிளிக்ஸ்


இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக  நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் நெட்பிளிக்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.


வழக்குப்பதிவு செய்ய அனுமதி


இந்த மனுவை இன்று (நவ. 27) விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், நெட்பிளிக்ஸ் நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டாலும், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னையில் வசிப்பதாகவும் தெரிவித்தார். 


அதுமட்டுமின்றி, இரு தரப்புக்கும் இடையேயான பிரச்சனை தமிழக அதிகார வரம்புக்குள் நடைபெற்றுள்ளது எனவும் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே இந்த உரிமையியல் வழக்கை தொடரலாம் எனவும்  நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார். மேலும், வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.


நயன்தாரா - தனுஷ் பிரச்னையின் முழு பின்னணி


நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் முதன்முதலாக இணைந்து பணியாற்றினர். அப்போது அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அந்த படத்தின் படப்பிடிப்பு காலகட்டத்திலேயே இருவருக்கும் காதல் மலர்ந்தது. அப்போது இருந்து பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருவரும் சென்னை ஈசிஆர் பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 


அப்போதே நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது திருமண ஒளிபரப்பு உரிமதத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் அளித்தது. இதற்காக அவர்களுக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெருந்தொகையை அளித்ததாக தகவல்கள் கூறுகின்றனர். அந்த வகையில், நெட்பிளிக்ஸின் அந்த திருமண ஆவணப்படத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் காதல் கதையை விவரிக்கும் இடங்களில் 'நானும் ரவுடிதான்' படத்தின் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட Behind The Scenes வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டது.


இதற்காக, நயன்தாரா தரப்பு நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள், பாட்டுகள், புகைப்படங்களை பயன்படுத்திக்கொள்ள தனுஷிடம் அனுமதி கேட்டதாகவும், ஆனால் அதற்கு தனுஷ் அனுமதி அளிக்காமல் நீண்ட காலமாக இழுத்தடித்து வந்ததாகவும் கூறப்பட்டது. தங்களது மீது உள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாகவே தனுஷ் இவ்வாறு செயல்பட்டதாக கூறி நயன்தாரா அந்த கடிதத்தில் எழுதியிருந்தார். 


மேலும், வெறும்   Behind The Scenes வீடியோக்கள் மட்டுமே தாங்கள் பயன்படுத்தியதாகவும், அந்த வீடியோக்களும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்டதில்லை எனவும் நயன்தாரா அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். டீசரில் அந்த  Behind The Scenes வீடியோக்கள் வெறும் 3 நொடிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அதற்கே ரூ.10 கோடி இழப்பீடு கேட்பதாகவும் நயன்தாராவின் தரப்பு குற்றஞ்சாட்டியது. 


தற்போது இந்த  Behind The Scenes வீடியோக்கள் ஆவணப்படத்திலும் பயன்படுத்தப்பட்டிருப்பதால் தனுஷின் வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனம், ஆவணப்படத்தை வெளியிட்ட நெட்பிளிக்ஸ், நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் ஆகியோர் மீது இந்த வழக்கை தொடர்ந்துள்ளது.


மேலும் படிக்க | தனுஷ்-நயன்தாரா சண்டை: நயனுக்கு ஆதரவு தெரிவித்தது ஏன்? பார்வதி விளக்கம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ