புது டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் மிகவும் தவறானது மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரானது என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் வன்முறை, பஸ் எரிப்பு, ரயில் மறியல் என போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த CAA மூலம் ஒரு சமூகத்தினர் தனிமைப்படுத்தப் படுவார்கள். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளது எனவும் பல அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில், தமிழ் சினிமாவில் பேசப்படும் இளம் இயக்குனர்களின் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ், தனது ட்விட்டர பக்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அவர், "குடியுரிமை திருத்தச் சட்டம் மிகவும் தவறானது மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரானது. இந்தியாவை மதச்சார்பற்றதாக வைத்திருக்க வேண்டும் என்றால், CAA வேண்டாம் என்று சொல்லுங்கள். NRC-க்கு இங்கு இடம் இல்லை என்று சொல்லுங்கள். மாணவர்கள் மீதான போலீஸ் வன்முறை வேண்டாம் என்று சொல்லுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.


மேலும் இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது என கடுமையாக சாடியுள்ளார்.


 



நேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், "குடியுரிமை திருத்தச் சட்டம் மீதான வன்முறை எதிர்ப்பு துரதிர்ஷ்டவசமானது மற்றும் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. விவாதம், கலந்துரையாடல் மற்றும் அதிருப்தி ஆகியவை ஜனநாயகத்தின் இன்றியமையாத பகுதிகள். ஆனால் ஒருபோதும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது என்றும், சாதாரண வாழ்க்கையைத் தொந்தரவு செய்வது நமது நெறிமுறைகள் இல்லை. இந்த சட்டம் இந்தியாவின் பழைய கலாச்சாரரம், நல்லிணக்கம், இரக்கம் மற்றும் சகோதரத்துவத்தை பிரதிபலிக்கிறது. எந்த மதத்தையும், இந்திய குடிமக்களையும் பாதிக்காது என்று எனது சக இந்தியர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த சட்டத்தை பற்றி ஒரு இந்தியர் கவலைப்பட ஒன்றுமில்லை எனக் கூறியிருந்தார்.


நேற்று கொல்கத்தாவில் CAA-வுக்கு எதிரான மெகா பேரணியில் கலந்துக் கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, "பாஜகவினர் மட்டுமே இங்கு தங்கியிருக்கும், மற்றவர்கள் அனைவரும் வெளியேறும்படி செய்யப்படுவார்கள். இதுதான் அவர்களின் அரசியல். இது ஒருபோதும் நடக்காது. இந்தியா அனைவருக்கும் உரியது. அனைவரும் இணைந்து வாழ்ந்தால் தானே நாடு வளர்ச்சி அடையும். நாம் அனைவரும் குடிமக்கள். நீங்கள் வாக்களிக்கவில்லையா? நீங்கள் இங்கு வசிக்கவில்லையா? எதற்கு குடியுரிமைச் சட்டம்? எனக் கடுமையாக மத்திய அரசை விமர்சித்து பேசினார்.


பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மசோதாவுக்கு எதிராக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர்.


இந்த சட்டத்தால் பூர்வ குடிமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அஸாம், மேகலாயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் . இதனையடுத்து ஹவுராவில் வன்முறைகளை கட்டுப்படுத்த இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இன்டர்நெட் சேவை இன்று மாலை 5 மணி வரை துண்டிக்கப்பட்டுள்ளது.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது