அத்தனை விருதுகளும் வந்து சேரட்டும் - கடைசி விவசாயிக்கு வசந்தபாலன் புகழாரம்
கடைசி விவசாயி படத்துக்கு இயக்குநர் வசந்தபாலன் புகழாரம் சூட்டியுள்ளார்.
மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த படம் கடைசி விவசாயி. அண்மையில் வெளியான இப்படத்தை பார்த்த ரசிகர்களும், திரை கலைஞர்களும் வெகுவாக பாராட்டினர்.
இயக்குநர் மிஷ்கின் மணிகண்டனின் வீட்டுக்கு சென்று மாலை அணிவித்து கௌரவம் செய்தார். குறிப்பாக மாயாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்த முதியவரின் நடிப்புக்கு பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர்.வெகு எதார்த்தமாக படமாக்கி இருந்த மணிகண்டன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் என்ற இடத்திற்கு நகர்ந்திருக்கிறார் என பலர் கூறுகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் வசந்தபாலன் கடைசி விவசாயி பாராட்டி இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், “பணிச்சுமை காரணமாக இன்று காலை தான் கடைசி விவசாயி படம் பார்த்தேன். படம் நெடுக தத்துவார்த்த புரிதலுடன் அமைக்கப்பட்ட காட்சிகள் நம்மை ஆழ்நிலை தியானத்திற்கு இழுத்து செல்கின்றன.மாயாண்டி கதாபாத்திரம் படம் நெடுக உதிர்க்கும் மெளனமும், சிதறிய சில சித்தர் வார்த்தைகளும், வயதின் சுருக்கங்களுடன் கூடிய முகமும், கை ஊன்றி எழுந்து கொள்கிற உடல்மொழியும் (உடல் மொழியல்ல அது தான் உண்மையும்கூட. பிரமாதமான பாத்திரத் தேர்வு தான் நடிப்பைத் தாண்டி கதாபாத்திரத்திற்கு உயிர் தருகிறது)அவரது செருப்பும் ஆயிரம் கதை சொல்கிறது.
மேலும் படிக்க | ‘இந்தியன்-2’ பாணியில் உருவாகும் ‘அஜித்-61’? கசிந்தது புதிய அப்டேட்!
விஜய் சேதுபதியும் பெரியவரும் முருக பெருமானை பற்றி பேசிக் கொள்கிற காட்சி பித்து நிலையின் உச்சம்.
விஜய் சேதுபதி மலை உச்சியில் மறைகிற இறுதிக் காட்சி கண்ணீரை வரவழைத்து விட்டது. பரவசம். நம்மை அறியாமல் நம் கால்கள் மிதக்கின்றன. கிராமம் என்றாலே பேரிரைச்சல் என்பதாக சினிமா பதிவு செய்தவண்ணம் இருக்கிற காலத்தில் இயக்குநர் மகேந்திரன் அவர்கள் காட்டுகிற கிராமம் மெளனமாக சுருண்டு கிடக்கும் மலைப்பாம்பைப் போல இருக்கும்.
மேலும் படிக்க | பீஸ்ட் படத்தில் உருவ கேலி: நியாயமா நெல்சன்?
அதுபோல இந்தப் படத்திலும் பேரிரைச்சல் இன்றி கிராமம் மதிய வெயிலைப்போல நிர்சலனத்தை வெளிப்படுத்துகிறது.
ஒன்றுமில்லாததை வெறித்த பார்க்கும் கண்கள் எத்தனை பெரிய உணர்வுகளைக் கடத்துகிறது. திரைக்கதை எழுதும் காட்சிகளுக்கான தகவல்களை கள ஆய்வின் மூலம் சேகரித்து எழுதியது போல இல்லாமல் வாழ்ந்து எழுதிய காட்சிகளாக மாற்றுகிற வித்தை மணிகண்டனுக்கு எளிதில் வருகிறது.
கொரிய இயக்குநர் கிம்கிடுக்கின் Spring, Summer, Fall, Winter... and Spring படம் பார்க்கும் போது மேலெழுந்து என்னை ஆட்கொண்ட பேரமைதியும் அதன் ஆழத்தில் மனதிற்குள் எழும் கேவல் இப்போது இந்த மத் - தியான வேளையிலும் எழுகிறது.
தமிழின் மிக முக்கியமான திரைப்படம்.உலகின் அத்தனை விருதுகளும் வந்து சேரட்டும்.வாழ்த்துகள் மணிகண்டன். நிதானத்திலும் பித்து நிலையிலும் ஒரு கதை எழுத, இயக்க , தயாரிக்க காலம் உங்களுக்கு ஒரு நன்வாய்ப்பு வழங்கியிருக்கிறது.இன்னும் நிறைய பித்தப்பூக்கள் பூக்கட்டும். தமிழ் நிலம் திரையில் மலரட்டும்” என பதிவிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR