SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.  இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் இயக்குனர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதுராஜ், நடிகர்கள் அருள்தாஸ், நடிகை வனிதா விஜயகுமார், கோமல் சர்மா, ரத்னா, லொள்ளு சபா மனோகர், சிதம்பரம், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, முத்துக்குமார், இந்திய தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும் நிறுவனருமான சாலமன், சமூக சொற்பொழிவாளர் முகிலன், தொழிலதிபர்கள் எஸ்.ஆர் பாபு, ராஜசேகர் உள்ளிட்ட பல இன்னும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மிஷன் படம் எனக்கு ரொம்பவும் முக்கியமானது - இயக்குனர் விஜய்!


இந்த நிகழ்வில் நாயகன் அசோக் குமார் பேசும்போது, “இந்தப் படத்தின் முதுகெலும்பு என்றால் அது இயக்குநர் எஸ்.ஆர் ராஜன் ஒருவர் தான். இமெயில் என்றால் ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம் இவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்ற மையப்படுத்தி ஒரு அழகான திரைக்கதையை நிறைய திருப்பங்களுடன் அவர் அமைத்துள்ளார். இந்த படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக ஜாக்கிசான் மற்றும் குங்பூ படங்களிலிருந்து குறிப்புகளை எடுத்து வடிவமைத்தார்கள். நேபாளத்திலிருந்து வந்த பீர் மாஸ்டர் என்பவர் இந்த சண்டை பயிற்சியை கவனித்தார். சண்டையின்போது எனது காது கிழிந்து விட்டது. மக்களிடம் இந்த படம் போய் சேரும்போது அந்த வலியெல்லாம் பெரிதாக தெரியாது. இயக்குநர் ராஜனின் இந்த துணிச்சலுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.


நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது, “இந்த தலைப்பிற்கு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. இமெயில் என்றாலே இன்று எல்லோருக்கும் தெரியும். இந்தப்படம் ஒரு கேமை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது என்பது தெரிகிறது. கேம் என்றாலே பிரச்சினைதான். அது பிக்பாஸ் கேமாக இருந்தாலும் சரி, போனில் இருக்கும் கேமாக இருந்தாலும் சரி எந்த கேமாக இருந்தாலும் அதில் நிச்சயமாக நமது மனது ஈடுபடத்தான் செய்யும். நாம் என்னதான் விளையாட்டிற்குள் சென்றாலும் கூட நமது மனதை பாதுகாப்பாக தற்காத்து வைக்க வேண்டும். ஆனால் அது இந்தக்கால தலைமுறையினரிடம் மிகவும் குறைவாக இருக்கிறது. பிறந்த குழந்தையின் கையில் செல்போனை கொடுத்து விடுகிறார்கள். அவர்களுக்கு நம்மை விட எல்லாமே அதிகமாக தெரிகிறது. எனது மூன்று வயது மகள் கூட மொபைல் மூலமாக ஆன்லைனில் பணம் கட்டும் அளவிற்கு வளர்ந்து விட்டாள். அதேசமயம் குழந்தைகளுக்கு எதை எவ்வளவு சொல்லிக் கொடுக்க வேண்டும், எதில் அவர்கள் கவனத்தை திருப்ப வேண்டும் என்பதை பெரியவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த படத்தில் அதைத்தான் சொல்லி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்” என்று கூறினார்.


இமெயில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான எஸ்.ஆர் ராஜன் பேசும்போது, “இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம். இதில் ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட் எல்லாமே இருக்கிறது. இரண்டு பாடல்கள், மூன்று சண்டை காட்சிகள் உள்ளது. மும்பை, கோவா, தமிழ்நாடு, கர்நாடகா, பாண்டிச்சேரி என ஐந்து மாநிலங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி உள்ளேன். இந்த படம் ஒரு ஆன்லைன் கேம் மோசடி பற்றிய கதை” என்று கூறினார்.


மேலும் படிக்க | Poornima Ravi:16 லட்சத்துடன் வெளியேறிய பூர்ணிமா..பிக்பாஸில் மொத்தமாக சம்பாதித்தது எவ்வளவு?


தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இதை ஒரு சுமாரான படம் என்று நினைத்து தான் வந்தேன். ஆனால் இங்கே காட்சிகளை பார்த்தபோது ரிச் ஆகவே எடுத்து இருக்கிறார்கள். ஒரு மசாலா படம் குஜாலா இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் இங்கே வரவில்லை. கதாநாயகிகள் படத்தை புரமோஷன் பண்ணுவதற்காக மட்டுமல்ல அவர்களையே புரமோஷன் பண்ணிக் கொள்வதற்காக இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டும். வேறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் வரவில்லை என்றால் அதை ஏற்றுக் கொள்ளலாம். இருந்தாலும் அவர்களையும் கேட்டு இதுபோன்று தேதிகளை முடிவு செய்ய வேண்டும். 


சமீபகாலமாக சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல படங்கள் பெரிய படங்களாக மாறி இருக்கின்றன. தரமணி திரைப்பட நகரத்தை மூடியபோது சிறிய படங்கள் எல்லாம் பாண்டிச்சேரிக்கும் பெரிய படங்கள் எல்லாம் ஹைதராபாத்திற்கும் கிளம்பி சென்றனர். அதனால் அவற்றை திறக்க வேண்டும் என்று கலைஞரிடமும் கடந்த வருடம் முதல்வர் மு.க ஸ்டாலினிடமும் கோரிக்கை வைத்தேன். சமீபத்தில் நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு பூந்தமல்லி அருகில் 140 ஏக்கரில் 500 கோடி செலவில் திரைப்படம் நகரம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு நம்மை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் இதை மனதார வரவேற்கிறோம்” என்று கூறினார்.


இயக்குனர் கே.பாக்யராஜ் பேசும்போது, “சிறு பட தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை தயாரிப்பாளர் ராஜன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நானும் கூட அவ்வப்போது இதுபற்றி கூறி வருகிறேன். ஒரு வளாகத்தில் நான்கு திரையரங்குகள் இருந்தால் அதில் ஒன்றை கட்டாயம் சிறுபட வெளியீட்டுக்காக கொடுக்க வேண்டும் என ஒரு சட்டமே கொண்டு வர வேண்டும். நிறைய திரையரங்குகள் கொடுத்தால் தானே மக்கள் வந்து படத்தை பார்த்து பாராட்டுவார்கள். இந்த படத்தின் நாயகன் அசோக் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. ரொம்பவே கொடுத்து வைத்தவர். படத்தில் அவரது காட்சிகளை பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக தெரிந்தது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் சண்டை காட்சிகளை நன்றாக நடித்துள்ளார்.


படம் முடியும்போது இந்த படத்தின் தயாரிப்பாளரை தனிமரமாக விட்டு விட்டார்கள் என்று சொன்னார்கள். கட்டாயம் சோதனைகள் வரும். சோதனை வந்தால் தான் நல்லது. அதையெல்லாம் தாண்டி தான் சந்தோசத்தை அனுபவிக்க முடியும். இமெயில் வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் பேப்பரில் தான் எழுதி அனுப்பி கொண்டிருந்தோம். இமெயில் வந்த பிறகு பேப்பரின் தேவை குறைந்து விட்டது. அதனால் மரங்களை வெட்டுவதும் குறைந்து இயற்கையும் பாதுகாக்கப்பட்டது. ஆன்லைனில் தான் மோசடி நடக்கிறது என்றில்லை. ராஜன் சார் சொன்னது போல படப்பிடிப்பு நடித்த அனுமதி வாங்கி சென்றாலும் அந்த இடத்தில் இருப்பவர்கள் லஞ்சம் கேட்பார்கள்.. அங்கே ஒரு தனி யூனியன் வைத்திருப்பார்கள்.. அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுப்பார்கள். அந்த மாதிரி கண்ணுக்கு தெரிந்து நிறைய மோசடிகள் நாட்டில் நடக்கிறது. தனி மனிதனாக பார்த்து திருந்தினால் மட்டுமே போன்ற மோசடிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறையும்” என்று கூறினார்.


இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர். அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார். கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 30 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் முத்தப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.  தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது.


மேலும் படிக்க | நயன்தாரா மீது வழக்குப்பதிவு... லவ் ஜிகாத்திற்கு ஆதரவா...? - முழு பின்னணி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ