பிரச்சினைகளுக்கு சண்டை தீர்வாகாது: கே.ராஜனுக்கு பாரதிராஜா பதில்
பிரச்சினைகளுக்கு சண்டை தீர்வாகாது என்று தயாரிப்பாளர் கே.ராஜனுக்கு இயக்குநர் பாரதிராஜா பதில் அளித்துப் பேசினார்.
கம்பெனி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர்கள் டப்பிங் பேசும் முன்பே முழு சம்பளத்தையும் கேட்பதாக காட்டத்துடன் தெரிவித்தார். இந்நிலையில் பிரச்சினைகளுக்கு சண்டை தீர்வாகாது என்று தயாரிப்பாளர் கே.ராஜனுக்கு இயக்குநர் பாரதிராஜா பதில் அளித்துப் பேசினார்.
ஸ்ரீ மகானந்தா சினிமஸ் நிறுவனம் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் ‘கம்பெனி’. எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் எழுதியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் கே.ராஜன், நாக் ஸ்டுடியோ கல்யாணம், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், சேலம் ஆர்.ஆர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். பாரதிராஜா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, ''பாரதிராஜா சாரிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், கடந்த 10 வருடங்களாக சுமார் 1000 படங்கள் எடுத்தார்களே அந்தத் தயாரிப்பாளர்கள் இப்போது எங்கே, ஏன் அவர்கள் படம் எடுக்கவில்லை? அனைவரும் நலிந்து போய்விட்டார்கள். சினிமா நல்ல தொழில், ஆனால் யாரும் உதவி செய்வதில்லை. குறிப்பாக நடிகர்கள் எந்தவித உதவியும் செய்வதில்லை. டப்பிங் முன்பாக முழு சம்பளத்தையும் கேட்டு நிற்கிறார்கள், அப்போது என் தயாரிப்பாளர் என்ன செய்வார், எங்கு போவார். நீங்க சம்பாதித்து வீடு வாங்கிட்டு போகணும், என் தயாரிப்பாளர் வீட்டை வித்துட்டு ரோட்டுக்கு வரணுமா. ஒரு மளிகை கடை வைத்து நஷ்டம் அடைந்தால் கூட, அதில் போட்ட தொகையில் 70 சதவீதம் திரும்ப வருகிறது. ஆனால், என் தயாரிப்பாளர் செய்யும் முதலீடுக்கு என்ன வருகிறது, முழுவதுமாக நஷ்டம்தான் அடைகிறார்.
மேலும் படிக்க | இந்தி மொழி சர்ச்சை - பாரதிதாசன் வரிகளை பதிவிட்ட ஏர்.ஆர்.ரகுமான்
டிவியில் இருந்து ஒரு நடிகர் சினிமாவுக்கு நடிக்க வந்திருக்கிறார். அவருக்கு ஒரு தயாரிப்பாளர் 12 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி நடிக்க வைத்திருக்கிறார். அதற்கு அந்த நடிகர் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு 8 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் படப்பிடிப்பு முடிந்த பிறகு மீதியுள்ள 4 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அதற்கு தயாரிப்பாளரும் சம்மதம் சொல்லி படப்பிடிப்பு நடந்திருக்கிறது. படப்பிடிப்பு முடிய நான்கு நாட்கள் இருக்கும் நிலையில், அந்த நடிகர் பாக்கி தொகையைக் கொடுத்தால்தான் நடிப்பேன், என்று கூறியிருக்கிறார். இது நியாயமா. அந்த நடிகர் யார் என்பதை அடுத்த மேடையில் நிச்சயம் சொல்வேன். நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன், அனைவரையும் தட்டிக் கேட்பேன், என்னை யாராலும் தடுக்க முடியாது. அப்படி இங்கு பேசுவதைத் தடுத்தால், ரோட்டில் மீட்டிங் போட்டுப் பேசுவேன். இனி இவர்களை விடுவதாக இல்லை'' என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பாரதிராஜா பேசுகையில், ''இங்கு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், பல பிரச்சனைகளைக் கூறினார். இதுவெல்லாம் கடந்து போகும். ஆனால் இதற்காக நாம் சண்டை போடக் கூடாது. எல்லமே நம்ம சகோதர்கள் தான், எனவே எதையும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்.
மேலும் படிக்க | பீஸ்ட் எந்த கதையின் காப்பியும் இல்லை; புதிதும் இல்லை - நெல்சன் திலீப்குமார்
‘கம்பெனி’படத்தில் நடித்த நான்கு பசங்களைப் பார்த்ததும் நம்ம அலைகள் ஓய்வதில்லை போல இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால், இது வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றுகிறது. உள்ளே என்ன வைத்திருக்கிறார்கள், என்று தெரியவில்லை. ஆனால், நான்கு பசங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள், அவர்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தெரிகிறது. நல்ல சிரித்த முகம், நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.
இங்கு இவ்வளவு பேர் வந்து வாழ்த்தியதே பெரிய விஷயம். நிச்சயம் படமும், ஹீரோவும் பெரிய வெற்றி பெறுவார்கள். இந்த இடத்தில் இவரை ஒரு ஹீரோவாக அப்பாவும், அம்மாவும் நிறுத்தியிருக்கிறார்கள். இது மிகப்பெரிய விஷயம். நிலம் நீர் காற்று இந்த மூன்றும் நம்மை வாழ வைக்கிறது. இவற்றுக்குப் பிறகு அப்பா, அம்மா தான் நம்மை வாழ வைக்கிறார்கள். எனவே அவர்களை மறக்கக் கூடாது. படம் பெயர் கம்பெனி கிழக்கிந்திய கம்பெனி போல மிகப்பெரிய கம்பெனியாக படம் வெற்றி பெறும் என்று வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | Beast Vs KGF2: ரிலீசுக்கு முன்பே ‘கே.ஜி.எஃப்-2’வை வென்ற பீஸ்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G