மாறுப்பட்ட ஜோனர்..ஈர்க்கும் காட்சிகள்.. எறும்பு படத்தின் டிரெய்லர் இதோ
சார்லி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘எறும்பு’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு பரவலான கவனத்தை பெற்று வருகிறது.
இயக்குநர் சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘எறும்பு’. இதில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் எளிய மக்களின் வாழ்வியலை முன்னிறுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மன்ட்ரூ ஜி வி எஸ் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சுரேஷ் குணசேகரன் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர், தயாரிப்பாளர் ரமணி ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் நடிகர்கள் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் சக்தி ரித்விக், ஒளிப்பதிவாளர் கே. எஸ். காளிதாஸ், படத்தொகுப்பாளர் எம். தியாகராஜன், இசையமைப்பாளர் அருண் ராஜ், பாடலாசிரியர்கள் மோகன் ராஜன், அருண் பாரதி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான சுரேஷ் குணசேகரன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் பிளாக்பஸ்டர் புரொடக்ஷன்ஸ் பி. யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், '' இந்த ஆண்டில் வெளியான ‘டாடா’, ‘குட் நைட்’ ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற படங்களின் ஒரு வரி கதை சிறியதாக இருக்கும். ஆனால் படைப்பு உணர்வுபூர்வமானாக இருந்ததால், பெரிய வெற்றியை பெற்றது. அதேபோல் ‘எறும்பு’ எனும் இந்த திரைப்படமும் பெரிய வெற்றியைப் பெறும். இந்தப் படத்தில் 'நடந்தால் குறையாத தூரம் எங்கே....' எனத் தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறேன். இந்த பாடலை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் அருண் ராஜுடன் இணைந்து தனி பாடல்களை ஆல்பமாக உருவாக்கி இருக்கிறோம். ‘பைரி’ என்ற திரைப்படத்திற்கு பிறகு அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். ‘எறும்பு’ தரமான திரைப்படம். நடிகர் சார்லியின் திரையுலக நடிப்பை கடந்து, அவரது இலக்கிய வாசிப்பும், இலக்கிய ஆளுமையும் எனக்கு பிடிக்கும். '' என்றார்.
இசையமைப்பாளர் அருண் ராஜ் பேசுகையில், '' இயக்குநர் சுரேஷ் படமாக்கிய காட்சிகளை எமக்கு காண்பித்தார். பிடித்திருந்தால் இசையமைக்கவும் என கேட்டுக்கொண்டார். காட்சிகளை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே இப்படத்திற்கு இசையமைக்கலாம் என தீர்மானித்தேன். காட்சிகளும்.. சொல்ல வந்த விசயமும் தனித்துவமானதாக இருந்ததால், இசையமைக்க ஒப்பு கொண்டேன். இது சிறுவர்களுக்கான படைப்பாக இருந்தாலும், இது கிராமிய மண் மணம் மாறாத படைப்பும் கூட. இயக்குநரும், தயாரிப்பாளருமான சுரேசை நான் தன்னம்பிக்கையின் அடையாளமாகவே பார்க்கிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என அனைவரும் தங்களது திறமையை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்ததால் பின்னணி இசையை ரசித்து ரசித்து அமைத்தேன். படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. ஐந்து பாடலாசிரியர்கள் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்கள். அனைவரும் முழுமையான பங்களிப்பை வழங்கினர். பாடல்கள் அனைத்தும் எளிமையானதாக இருக்கும். ஆனால் இந்த எளிமையை கொண்டு வருவதற்கு அனைவரும் கடினமாக உழைத்தோம். படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் சக்தி ரித்விக் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
இந்த திரைப்படத்தை மேலோட்டமாக பார்த்தால் கிராமிய படமாக இருக்கும். ஆனால் உள்ளார்ந்து பார்த்தால் இது ஒரு உலக அளவிலான திரைப்படம். இதற்காகவே இப்படத்திற்கான இசையை சர்வதேச தரத்தில் தான் அணுகி இருக்கிறேன். ஒரு ஈரானிய திரைப்படம்.. துருக்கி திரைப்படம்.. ஐரோப்பிய திரைப்படம்.. ஆகியவற்றை போல் இப்படத்தின் பின்னணி இசை அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக இணையதளம் மூலம் பிரத்தியேக இசைக் கலைஞரை தேடி கண்டறிந்து அவர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. குழந்தைகளுக்கான படம் என்பதால் நிறைய குழந்தைகளின் குரலை தேடி பதிவு செய்திருக்கிறோம். சில திரைப்படங்களில் மட்டும் தான் கற்பனை திறனை பயன்படுத்த முடியும். வணிக சினிமாவில் ஒரு எல்லை இருக்கும். ‘எறும்பு’ போன்ற கலை சார்ந்த படைப்புகளில் பணியாற்றுவது மகிழ்ச்சியானதாக இருந்தது. '' என்றார்.
குழந்தை நட்சத்திரம் சக்தி ரித்விக் பேசுகையில்,'' இந்தப் படத்தில் கிராமத்தில் இயல்பாக இருக்கும் சிறுவர்கள். கஷ்டமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்களின் ஒரு மோதிரம் காணாமல் போய்விடுகிறது. அந்த மோதிரத்தை வாங்க அக்கா- தம்பி இருவரும் எப்படி கஷ்டப்பட்டார்கள்.. அவர்கள் வாங்கினார்களா? இல்லையா? என்பதே ‘எறும்பு’ படத்தின் கதை. எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஒரு கிராமத்தில் இப்படி எல்லாம் கூடவா இருப்பார்கள் என வியப்பை அளித்தது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரிடமும் மகிழ்ச்சியாக இருந்தோம். இந்தப் படத்தில் தான் நான் முதல் முறையாக முயலை பார்த்தேன். தொடக்கத்தில் தயக்கமும், பயமும் இருந்தது. அதன் பிறகு அதனுடன் பழகிவிட்டேன். ஒருமுறை முயல் எனது வலது கையில் கீறி விட்டது. அதன் பிறகு படப்பிடிப்பில் புதிய முயலுடன் நடிக்க வேண்டியதிருந்தது. அந்த முயல் மிகவும் கோபமாக இருந்தது. முயலுடன் பழகியதும் மறக்க முடியாததாக இருந்தது. '' என்றார்.
எம். எஸ். பாஸ்கர் பேசுகையில், '' வெள்ளித்திரை படத்திற்கு பிறகு இனிய நண்பரான சார்லியுடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை மேம்படுத்துவதற்காக சார்லியும், நானும் விவாதிப்போம். இதனை இயக்குநரும் அனுமதிப்பார். விசயம் நன்றாக இருந்தால், இயக்குநர் சுரேஷ் அதனை இணைத்துக் கொள்வார். என்னைப் பொறுத்தவரை எப்போதும் சுறுசுறுப்பாகவே பணியாற்றும் இயக்குநர் சுரேஷ் தான் எறும்பு. இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது என்னுடைய கண் முன்னால் கந்து வட்டியின் கொடுமை தாங்காமல் தீக்குளித்த ஒரு குடும்பத்தினரின் புகைப்படம் வந்து சென்றது. வட்டி வாங்குவது வேதனையான விசயம். மிக கடுமையாக பேச வேண்டிய வேடம் இது. இதனால் சில தருணங்களில் எனக்கே என் மீது வெறுப்பு வந்தது. அந்த இரண்டு குழந்தைகள் வட்டி கட்டுவதற்காக உழைக்கும் உழைப்பு எப்படி இருந்தது என்றால்.. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்களே.. அப்படி இருந்தது. அந்த வகையில் ‘எறும்பு’ நல்ல கருத்தை சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அதிகபட்சம் யாரும் கடன் வாங்காதீர்கள். ஏனெனில் கடன் என்பது மிக மோசமான விசயம். அப்படி வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த கடனை அடைப்பதற்கான வருவாயை ஆண்டவன் நமக்கு அருள வேண்டும். இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். '' என்றார்.
நடிகர் சார்லி பேசுகையில், '' 2019 ஆம் ஆண்டில் இயக்குநர் சுரேஷ் என்னை சந்தித்து, ‘உங்களுக்காக ஒரு கதையை எழுதி இருக்கிறேன். ஒரே ஒரு நாள் மட்டும் வந்து நடித்துக் கொடுக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். அப்போது நான் அவருக்கு தற்போது ஒரு திரைப்படத்தை ஓ டி டி யில் இரண்டு மாதம் வரை பார்க்கிறார்கள் என்றேன். அதன் பிறகு தான் நான் இயக்குவது குறும்படம் என விளக்கம் அளித்தார். அதன் பிறகு படப்பிடிப்பு தளம் எங்கே? எனக் கேட்க, சிதம்பரம் அருகே உள்ள அறந்தாங்கி எனும் சிறிய கிராமம் என்றார். என்னுடன் குழந்தை நட்சத்திரமான சக்தி ரித்விக்கும் நடித்தார். எங்களைப் பொறுத்தவரை இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் நாங்கள் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் ' எறும்பு'. படப்பிடிப்பின் போது ஒட்டுமொத்த கிராமமும் இயக்குநர் சுரேஷுக்கு உதவி செய்தது. இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக கேட்ட பிறகு இயக்குநர் சுரேஷிடம் இந்த படத்தில் நடிக்கும் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் மற்றவர்களால் பாராட்டப்படுவார்கள் என்றேன். இந்தத் திரைப்படத்தை பொருத்தவரை சுரேஷ் தான் உண்மையான எறும்பு. அந்த எறும்பு தான்.. எங்களை எல்லாம் எறும்பாக மாற்றியது. படத்தின் படப்பிடிப்பு 2021ல் நடைபெற்ற போது கொரோனா பிடியில் சிக்கி இருந்தது. படபிடிப்பு தளத்தில் குழந்தை நட்சத்திரமான சக்தி ரித்விக் ஆன்லைனில் பாடத்தை கற்றுக் கொண்டே நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் மற்றவரின் பாதிப்பு இல்லாமல் தனித்துவமாக நடித்திருக்கிறார்கள். இதுதான் இதன் சிறப்பு. எறும்பு வழக்கமான படம் அல்ல உலக அரங்கில் முதல் தமிழ் சினிமா இதுதான். தாத்தா- தந்தை- தாய் ஆகியோரின் பெயரை...பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சூட்டியிருக்கிறார் இயக்குநர். தலைமுறையை மறக்காத படைப்பாளியான சுரேஷ், தன் மண்ணில் பெற்ற அனுபவத்தை எறும்பாக உருவாக்கி இருக்கிறார். இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று கவிஞர்கள், பாடலாசிரியர்கள் இங்கு வாழ்த்தியிருக்கிறார்கள். இவர்களின் வார்த்தைகளை ரசிகர்களும் முன்மொழிந்து, இப்படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் பேசுகையில், '' இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இயக்குநர் என அனைவரும் எனது நண்பர்கள். நண்பர்கள் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். இயக்குநர் சுரேஷிடமிருந்து நான் கற்றுக்கொள்ள விரும்பும் விசயம் அவரது துணிச்சல். சுரேஷின் தைரியத்திற்காகவே இந்த படம் வெற்றி பெறும். நான் எந்த மாதிரியான படங்களை இயக்க வேண்டும் என்று விரும்பினேனோ... அதுபோன்ற ஒரு படம் தான் ‘எறும்பு’. நான் இந்த படத்தை பார்த்து விட்டேன். யதார்த்தமாகவும், அழகியலுடன் படம் இருக்கும். இந்தப் படம் பார்த்த பிறகு மனதில் ஒரு நிறைவு உண்டாகும். இந்த படத்திற்கு நடிகர்கள் பக்க பலம். குறிப்பாக எம். எஸ். பாஸ்கர், சார்லி, ஜார்ஜ் மரியான் ஆகிய மூவரின் கதாபாத்திரங்களும் தனித்துவமாக இருக்கும். இவர்களுடன் அக்கா - தம்பி கதாபாத்திரத்தில் நடித்த மோனிகா மற்றும் சக்தி ரித்விக்கின் நடிப்பும் அற்புதம். நடிகர்கள் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள் இதற்காக இந்த படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும்.'' என்றார்.
மேலும் படிக்க | அந்த கேரக்டரில் ராஷ்மிகாவை விட நான் நல்லா நடிச்சிருப்பேன்- ஐஸ்வர்யா ராஜேஷ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ