மீண்டும் சர்ச்சைக்குரிய கதையில் கை வைத்த ‘ஜெய்பீம்’ இயக்குநர்!- எந்த வழக்கு தெரியுமா?
ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல், தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கு ஒன்றை மையமாக வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாகத் தகவல்.
நடிகர் அசோக் செல்வன் நடித்த கூட்டத்தில் ஒருத்தன் படம் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆன ஞானவேல் இரண்டாவது இயக்கிய படம் ஜெய்பீம்.
சூர்யா தயாரித்து நடித்த இப்படம் தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆனது. இருளர் சமூக மக்களின் வாழ்க்கையையும் வலியையும் பிரதிபலிக்கும் விதமான கதையில் அமைந்த ஜெய்பீம் பொதுமக்களிடையே நல்ல கவனத்தைப் பெற்றது.
அதே போல படத்தில் இடம்பெற்ற சில அம்சங்கள் பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது. குறிப்பாக, இப்படத்தின் ஒரு காட்சி மற்றும் கதாபாத்திரப் பெயர் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிரான விதத்தில் அமைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. திரைத் துறை சார்ந்து மட்டுமல்லாது அரசியல் அரங்கிலும் இவ்விவகாரம் சர்ச்சையாக வெடித்தது.
அண்மைக் காலத்தில் வெளியான படம் ஒன்று, நீண்ட நாட்களாகத் தொடர் சர்ச்சையில் இருந்தது என்றால் அது ஜெய்பீமாகக்தான் இருக்கும் எனச் சொல்லும் அளவுக்கு இவ்விவகாரம் பல நாட்கள் நீடித்தது. இந்நிலையில் ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் தனது அடுத்த படத்துக்குத் தற்போது தயாராகிவருகிறார். அந்த வகையில் தற்போது அவர் கையில் எடுத்துள்ளதும் சர்ச்சைக்குரிய கதைக்களம்தானாம்.
அதாவது, மறைந்த தொழிலதிபரான ‘சரவண பவன்’ ராஜகோபால் வழக்கை மையமாக வைத்துதான் இப்படம் எடுக்கப்படவுள்ளதாம். 2001ஆம் ஆண்டு ஜீவஜோதி எனும் பெண்ணை மறுமணம் செய்துகொள்ளும் நோக்கில் அவரது கணவரைக் கடத்திக் கொலை செய்ததாக ராஜகோபால் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனிடையே உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு ராஜகோபால் காலமானார்.
மேலும் படிக்க | ஷங்கர் இயக்கும் ராம்சரண் படத்தில் மோசடி! - எச்சரிக்கும் விஜய்யின் 'வாரிசு' டீம்!
இந்த வழக்கில் ஜீவஜோதி நடத்திய சட்டப் போராட்டத்தையும் அவர் சந்தித்த பல இன்னல்களையும் மையமாக வைத்துதான் இந்தப் படம் தற்போது உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ஜங்க்லீ பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளதால் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ