சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் நேற்று ஒரு குட்டி தீபாவளியை கொண்டாடினர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் என மூன்று மொழி சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் 'ஜெயிலர்' படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில், ரஜினிகாந்த், சிவராஜ்குமார், இயக்குநர் நெல்சன், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அனிருத், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விக்னேஷ் சிவன், அருண்ராஜா, விடிவி கணேஷ், சூப்பர் சுப்பு என பலர் கலந்து கொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர்களை பெருமைபடுத்திய ரஜினி


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஆக்‌ஷன் டிராமாவான ஜெயிலர் பட ரிலீசுக்காக ரஜினி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். சூப்பர்ஸ்டார் கலந்துகொள்ளும் பல நிகழ்ச்சிகளை போல, நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவிலும் அவரது பேச்சே ஹைலைட்டாக அமைந்தது. மனம் திறந்து பேசிய ரஜினிகாந்த், விழாவில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். ரஜினிகாந்த தனது உரையில், தனது இயக்குனர்கள் மீது தனக்குள்ள நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். மேலும் தனது முந்தைய இயக்குனர்களான முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணான், வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இப்போது தன்னை இயக்கியுள்ள நெல்சன் வரை அனைவரையும் தொடர்ந்து தனது வாழ்க்கையை வடிவமைத்ததற்காக பெருமைபடுத்தினார். 


நெல்சனா... கொஞ்சம் யோசிங்க...


இயக்குனர் நெல்சன் பற்றிய பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துகொண்ட ரஜினி, விஜய் நடித்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானபோது பல விநியோகஸ்தர்கள் தன்னை அணுகி இயக்குனரை மாற்றும்படி அறிவுறுத்தியதாக தெரிவித்தார். “ஒரு ப்ரோமோ ஷூட் செய்து படத்தை அறிவித்திருந்தோம். எங்கள் ப்ரோமோ ஷூட்டுக்கு பிறகு பீஸ்ட் வெளியானது, எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இயக்குனர் நெல்சனுக்குப் பதிலாக வேறு ஒருவரை மாற்றும் படி பல விநியோகஸ்தர்களிடமிருந்து எனக்கு நிறைய அழைப்புகள் வந்தன. அதன் பிறகு சன் பிக்சர்ஸ் குழுவைச் சந்தித்துப் பேசினோம். பீஸ்ட் மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும், அதன் விநியோகஸ்தர்களுக்கு எந்த நஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அவர்கள் என்னிடம் தெரிவித்திருந்தார்கள்” என்று ரஜினி தெரிவித்தார்.


 'இவன் ஹீரோவா எப்படி?' 


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சனிடம் தான் கதை கேட்ட அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். "நெல்சனை கதை சொல்ல 10 மணிக்கு வரச் சொன்னேன். அவர் 11:30 மணிக்கு வரட்டுமா என்றார். ஆனால், 12 மணி வரை ஆபிஸ் பக்கமே அவர் வரவில்லை. அதன்பிறகு, வந்தவர் உடனே நல்லதாக ஒரு காபி கொடுங்க என்று கேட்டார். குடித்து முடித்துவிட்டு கதையின் ஒன்லைன் சொன்னார். சொல்ல சொல்ல என்னை அப்படியே உத்து பார்த்தார். 'இவன் ஹீரோவா எப்படி?' என அவர் மனதில் நினைத்தது எனக்கு கேட்டது' என ரஜினி கூற விழாவில் கூடி இருந்த அனைவரும் சுவாரசியம் பொங்க கேட்டுக்கொண்டிருந்தனர். 


ஒன்லைன் எனக்கு பிடித்திருந்தது...


“அவர் சொன்ன ஒன்லைன் எனக்கு பிடித்திருந்தது. இதை முழுமையான ஸ்கிரிப்டாக உருவாக்கிய பிறகு என்னிடம் திரும்பி வருவதாக கூறி கிளம்பினார். பீஸ்ட் படப்பிடிப்பை முடித்த 10 நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் என்னைச் சந்தித்து முழு கதையையும் விவரித்தார். அது அற்புதமாக இருந்தது. அண்ணாத்த படத்திற்கு பிறகு எனது அடுத்த படத்தை முடிவுசெய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்டேன். சில இயக்குனர்கள் என்னிடம் சொன்ன ஒருவரி ஐடியாக்கள் முழு நீள கதைகளாக உருவாக்கியபோது அது எனக்கு சரியாக வரவில்லை, ” என்று ரஜினி ஜெயிலர் படத்தின் துவக்க கட்டங்களை பற்றி விளக்கினார்.  


மேலும் படிக்க | Jailer Audio Launch: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..!


டைரக்சன் என்று வந்துவிட்டால் ஹிட்லர்..


தொடர்ந்து நெல்சனை புகழ்ந்த ரஜினி, 'நெல்சன் நல்ல நகைச்சுவையாகப் பேசுவார். ஆனால், டைரக்சன் என்று வந்துவிட்டால் ஹிட்லராக மாறிவிடுவார். என்ன வேண்டுமோ அதை வாங்காமல் விடமாட்டார். இந்த படத்தில் பிளாக் காமெடி எல்லாம் இருக்கு. சீரியஸான சீனில் எல்லாம் நெல்சன் காமெடி பண்ணுவார். 'காவாலா' சாங்கில் எனக்கு நிறைய ஸ்டெப்ஸ் இருக்ப்பதாக பில்டப் கொடுத்து அழைத்துக்கொண்டு போனார்கள். ஆனால், இரண்டே ஸ்டெப் கொடுத்துட்டு போதும் என்று சொல்லிவிட்டார்கள். அன்று முழுதும் நான் தமன்னாவிடம் பேசவே இல்லை' என ஷூட்டிங் ஸ்பாட் ரகசியங்களை போட்டுடைத்தார் ரஜினி.


எங்கோ உயரத்தில் இருந்திருப்பேன்...


வழக்கம் போல ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய ரஜினிகாந்த், 'குரைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. நம் வேலையை பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும். குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருந்திருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம். தயவு செய்து குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள். நீங்க குடிப்பதால் அம்மா, மனைவி என்று குடும்பத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது.


சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்...


உலக அளவில் ஒரே சூப்பர்ஸ்டாராக உலா வரும் ரஜினி அந்த பட்டம் தனக்கு கற்றுக்கொடுத்த பாடங்களின் பின்னணியையும் விளக்கினார். 'சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பிரச்சனை இப்ப இல்ல 1977 லயே ஆரம்பித்து விட்டது. அப்போது எனக்கு ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் என்று டைட்டில் போட்டார்கள். அப்போது நான் வேண்டாம் என்று கூறினேன். ஏனென்றால் அந்த வேளையில், கமல் மிகப்பெரிய உயரத்திதில் இருந்தார். சிவாஜியும் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருந்தார். அதனால சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று கூறினேன். ஆனால், அதற்கு 'ரஜினி பயந்துட்டாரு' என்று சிலர் கூறினார்கள். நான் பயப்படுவது இரண்டே பேருக்குதான். ஒன்று அந்த பரம்பொருள் கடவுளுக்கு, மற்றொன்று நல்லவர்களுக்கு.. மற்றபடி யாருக்கும் பயப்படுவதில்லை" என்று அதிரடியாக பேசி தானே நிஜ சூப்பர்ஸ்டார் என்பதை மீண்டும் நிரூபித்தார் ரஜினி. 


நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள 'ஜெயிலர்' படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க |  Jailer Audio Launch: ஜெயிலர் படத்தின் அனைத்து பாடல்களும் ரிலீஸ்..! மொத்தம் இத்தனை பாடல்களா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ